ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

தேவை தண்ணீர் சிக்கணம்




நரேந்திர மோடி முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு (2001-ம் ஆண்டுக்கு
முன்பு) குடிநீர்ப் பிரச்னை பூதாகாரமாக இருந்தது. கடந்த 75 ஆண்டுகளில் 26
பஞ்சங்கள் குஜராத்தில் கோரத்தாண்டவம் ஆடியுள்ளன. அதாவது, சராசரியாக 3 ஆண்டுக்கு ஒருமுறை பஞ்சம் வந்துள்ளது.

குஜராத் ஒரு வறண்ட பகுதி என்பதால், தண்ணீர்ப் பிரச்னை இருக்கத்தான்
செய்யும் என்று அனைவரும் கூறினர். அது மட்டுமல்லாமல், இந்தத் தண்ணீர்ப்
பிரச்னை இன்னும் மோசமடையும் என்றும், இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும் கூறினார்கள்.

என்ன செய்தார் மோடி?
குடிநீர்ப் பிரச்னையின் மூல காரணங்களை மோடி ஆராய்ந்தார். முதலில் சரி
செய்யப்படவேண்டியது நீர் நிர்வாகம் என்பதை அவர் உணர்ந்தார். கால தாமதம் இன்றி 2001-ம் ஆண்டிலேயே பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். குறிப்பாக பூமியை உறிஞ்சி தண்ணீர் எடுக்கும் நிலையை மாற்றி, மழை நீரையும் ஆற்று நீரையும் குடிநீருக்காகப் பயன்படுத்தவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காகப் பல்வேறு கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.

குஜராத்தின் தென் கிழக்கில் ஓர் ஓரமாக ஓடும் நர்மதை நதிதான், குஜராத்தின்
மிகப்பெரிய நீர் ஆதாரம். இதை வறண்ட பகுதிகளுக்கும், நல்ல குடிநீர்
கிடைக்காத பிற பகுதிகளுக்கும் பயன்படுத்த முடிவு செய்தார். இதற்காக
ஏராளமான பெரிய கால்வாய்கள் வெட்டப்பட்டன. 1987 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 அடி விட்டமுள்ள பெரிய குழாய்கள் அமைக்கப்பட்டன. இத்தகைய பிரதானக் குழாய்களிலிருந்து 1,15,058 கிலோமீட்டர் தூரத்துக்குக் கிளைக் குழாய்கள் அமைக்கப்பட்டன. அவைமூலம், குக்கிராமங்களுக்கும் தற்போது குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. இந்தத் திட்டத்தின்மூலம் 11,000-க்கும் மேற்பட்ட கிராமங்களும் 127 நகரங்களும் தரமான குடிநீர் வசதி பெறுகின்றன.

குஜராத்தில் ஏராளமான புதிய குளங்கள், ஏரிகள், கண்மாய்கள்
வெட்டப்பட்டுள்ளன. மற்றும் ஏற்கெனவே இருக்கும் ஏரிகள், குளங்கள்,
கண்மாய்கள் அனைத்தும் தூர் வாரப்பட்டுள்ளன.குடிநீர்ப் பிரச்னையை
முழுமையாகத் தீர்த்ததோடு நரேந்திர மோடி நின்றுவிடவில்லை. குஜராத்தில்
வருங்காலங்களில் எப்போதுமே குடிநீர்ப் பிரச்னை ஏற்பட்டுவிடக்கூடாது என்று எண்ணித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இங்குதான் நரேந்திர மோடி,  மற்ற தலைவர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்.

கிராமங்களில் நீர் நிர்வாகம்
: மக்களின் பங்களிப்பு இல்லாமல் செயல்படுத்தப்படும் எத்தகைய அரசுத்
திட்டங்களும் வெற்றி பெறாது என்பதில் உறுதியாக உள்ளார் நரேந்திர மோடி.
இதன் விளைவாக கிராம மக்களே தங்களின் நீர் ஆதாரத்தை நிர்வகிக்கும் அமைப்பு முறையை மோடி ஏற்படுத்தியுள்ளார்.

கிராம அளவில் அந்தந்தக் கிராமவாசிகளைக் கொண்டு தண்ணீர் கமிட்டிகள்
அமைக்கப்பட்டுள்ளன. அந்த கமிட்டி கிராம சபையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. தண்ணீர் கமிட்டியே அந்த கிராமத்தின் தண்ணீர்ப் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும். நீர் ஆதாரங்களைப் பராமரிப்பது, ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான தரமான குடிநீரை வழங்குவது, குடிநீருக்காக ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு கட்டணம் வசூலிப்பது என்பதை முடிவு செய்து, அந்தப் பணத்தை வசூலிப்பது போன்ற பணிகளை இந்த தண்ணீர் கமிட்டி செய்துவருகிறது.

2012-ம் ஆண்டுக் கணக்குப்படி குஜராத்தில் 17,895 கிராமங்களில் தண்ணீர்
கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, ஒவ்வொரு கிராமத்திலும் 5
பேருக்கு, குடிநீர் தரப் பரிசோதனை மேற்கொள்ளப் பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளது. அதோடு அதற்குத் தேவையான கருவிகளையும் அரசே
வழங்குகிறது.

தண்ணீரை எவ்வளவு கஷ்டப்பட்டுச் சேமிக்கிறார்களோ, அதே அளவு
முக்கியத்துவம், தண்ணீர் வீணாகாமல் தடுப்பதிலும் கொடுக்கப்படுகிறது.

மழை நீரானாலும், ஆற்று நீரானாலும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வீணாகக்கூடாது என்பதில் நரேந்திர மோடி கண்ணும் கருத்துமாக உள்ளார். கிராம அளவில் உள்ள தண்ணீர் கமிட்டியில் உள்ளவர்கள், தண்ணீர் வீணாவதைத் தடுப்பதிலும் கவனம் செலுத்துகின்றனர்.

வீடுகளுக்குக் குடிநீர் வழங்க அமைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டிகளுக்கு
நீரேற்று நிலையங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வருகிறது.
இத்தகைய நீரேற்று நிலையங்களிலிருந்து ஒவ்வொரு கிராம நீர்த்தேக்கத்
தொட்டிகளுக்கும் எவ்வளவு லிட்டர் தண்ணீர் தேவையோ அவற்றை மட்டுமே
வழங்குகின்றனர்.

நவீன முறையில் குடிநீர் விநியோகம்:

ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் இணைப்பு மூலம் வழங்கப்படும் தண்ணீர்,
வீணாகாமல் விநியோகம் செய்யப்படுகிறது. எலக்ட்ரானிக் கருவிகள்மூலம் நவீன முறையில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஒரு தனி நபருக்குக்
குளிப்பதற்கும், குடிப்பதற்கும், சமைப்பதற்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு
70 லிட்டர் தண்ணீர் வீதம் வழங்கப்படுகிறது. கிராமத்தில் உள்ள வீடுகள்,
அவற்றில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கிட்டு, கிராம தண்ணீர் கமிட்டி அந்த கிராமத்துக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு லிட்டர்
தண்ணீர் தேவை என்பதை முடிவு செய்து அதனை நீரேற்றும் நிலையத்துக்குத்
தெரிவிக்கிறது. அதன்படி நீரேற்று நிலையத்திலிருந்து அந்தக் கிராமத்துக்குத் தேவையான தண்ணீர் கிராம நீர் தேக்கத் தொட்டிக்கு  விடப்படுகிறது.

இப்போது, ஒரு வீட்டில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது என்று
வைத்துக்கொள்வோம். அல்லது அந்தக் கிராமத்தில் ஒரு திருவிழா நடக்கிறது
என்று வைத்துக்கொள்வோம். இதுபோன்ற நேரங்களில், கிராம தண்ணீர்
கமிட்டியிடம் முன்னரே தங்களுக்கு எவ்வளவு தண்ணீர் கூடுதலாகத்
தேவைப்படுகிறது, எத்தனை நாட்களுக்குக் கூடுதலாகத் தண்ணீர் தேவைப்படுகிறது  என்பதைத் தெரிவிக்கவேண்டும். அதற்கேற்ப அவர்கள் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வார்கள். அனைத்தும் எலக்ட்ரானிக் மூலமாகச் செயல்படுவதால் நடைமுறைப்படுத்துவது எளிதாகிறது.


இப்படி வழங்கப்படுகின்ற தண்ணீர் இலவசமாக வழங்கப்படுவதில்லை. தண்ணீரைப் பயன்படுத்தும் அளவைப் பொறுத்து 10 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது போக தினசரி ‘ஒரு வீட்டுக்கு ஒரு ரூபாய்’ என்ற திட்டமும் நடைமுறையில் உள்ளது. இது குஜராத்தில் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும்.

தண்ணீருக்கான பட்ஜெட்:

இந்திய அளவில் மழைநீர் சேகரிப்பு 17 சதவீதம். ஆனால் குஜராத்தில் மழைநீர்
சேகரிப்பு 72 சதவீதம். நீர் நிர்வாகத்தில் குஜராத் மாநிலம் இந்தியாவிலேயே
முதல் இடத்தில் உள்ளது.

குஜராத்தில் அடுத்துவரும் 20 ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு தொலை நோக்குப்  பார்வையில் குடிநீர்க் குழாய் பதிப்பது போன்ற வேலைகளைச் செய்துவருவதால் இனிவரும் ஆண்டுகளில் குடிநீர் மற்றும் கழிவு நீர் மேம்பாட்டுக்காக அதிக நிதி ஒதுக்க வேண்டியதில்லை என்ற சூழல் உள்ளது.

கிராம அரசு:

நிதியை ஒதுக்கீடு செய்து முறையான திட்டங்களைச் செயல்படுத்தியதன் மூலம், ‘தீர்க்கவே முடியாது’ என்று அனைவரும் ஒப்புக்கொண்ட குஜராத்தின்
குடிநீர்ப் பிரச்னை முற்றிலுமாகத் தீர்க்கப்பட்டுவிட்டது. இதன்  முதுகெலும்பாகச் செயல்பட்டு வருவது கிராம சபையுடன் இணைந்து செயல்படும்  ‘தண்ணீர் கமிட்டி’ என்றால் மிகையாகாது.இதுதான் உண்மையான ‘கிராம அரசு’ இந்தத் திட்டத்துக்காக குஜராத்துக்கு பிரதமர் விருது கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, மோடியின் இந்தத் திட்டத்தை வெகுவாக பாராட்டி, விருது அளித்துள்ளது.

குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரின் மணிநகர் பகுதியில் புதிதாகக் கட்டி
முடித்துள்ள எல்.ஜி மருத்துவமனையை நான் பார்வையிட்டேன். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவரிடம் நான் பேசினேன். அப்போது அவர் சொன்ன ஒரு தகவல். ‘முன்பெல்லாம் ரயில் மூலம்தான் எங்களுக்குக் குடிநீர் வந்தது. ஆனால் இப்போது குழாய் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் விடுகிறார் நரேந்திர மோடி. சபர்மதி நதியின் ஆற்றங்கரைத் திட்டம் மூலம் அகமதாபாத் நகரின் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், குடிநீருக்காகப் படாத பாடு பட்ட எங்களுக்கெல்லாம் இப்போது வீட்டுக்கே தண்ணீர் வருகிறது. என்றார் அவர் பெருமிதமாக.

இந்தியாவிலேயே வறண்ட மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில் தண்ணீர்ப்
பிரச்னையைத் தீர்ப்பது சாத்தியம் என்றால் ஏன் பிற மாநிலங்களில் முடியாது?

"மோடியின்  குஜராத்" என்ற நூலிலிருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக