பூதத்தாழ்வார்
பூதத்தாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று
ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார். மாமல்லபுரத்தில் பிறந்த இவர் வைணவ
நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம்
திருவந்தாதியைப் பாடியுள்ளார். இது நூறு வெண்பாக்களால் ஆனது.
அவதாரத்தலம்:
கடல் வணிகத்திலும் சிற்ப கலையிலும் சிறந்த பெயர் பெற்ற நரசிம்மவர்ம
பல்லவரால் தோற்றுவிக்கப்பட்ட நகரம் மஹாபலிபுரம். கலைக்கோவிலாக விளங்கும்
இந்நகரில் எங்கு பார்த்தாலும் மலர்ந்த தோட்டங்கள் மல்லிகை பூக்கள் காடு
போல் வளர்ந்து இருக்கும். கடலும் கடல் சார்ந்த இடத்தில் நீலோற்பவ மலர்கள்
நிறைந்த தடாகங்களும் நிறைய உண்டு.
இந்த கடல் சார்ந்த இடத்தின் நடுவே நீலோற்பவ மலர் ஒன்றில் சித்தார்த்தி
ஆண்டு ஐப்பசி திங்கள் வளர்பிறையில் வரும் நவமிதிதி புதன் கிழமை அவிட்ட
நக்ஷத்திர நாளில் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான
கௌமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தின் அம்சமாக இவர் பிறந்தார்.
மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலை அண்டிய பகுதியிலேயே இவர்
பிறந்ததார். இக் கோயிலின் முன்பு இதைக் குறித்த மண்டபம் ஒன்றும்
இருந்ததாகத் தெரிகிறது.
ஸ்ரீமந்நாராயணனின் பேரருளால் திருஅவதாரம் பண்ணின இந்த குழந்தையே
பூதத்தாழ்வார் ஆகும். மக்கள் அந்த குழந்தையை பூதத்தான் என்று அழைத்தனர்.
அக்குழந்தையை பூமணத்தோடு வீசும் தென்றல் தாலாட்ட நீரிலே நீந்தி வரும்
அன்னப் பறவைகள் சூழ்ந்து நின்று காக்க ஸ்ரீமந்நாராயணனும் பிராட்டியாரும்
கருடாழ்வார் மீது ஆரோகணித்து பேரருளை மழைப் போல் வருவித்தனர்.
முகத்தில் காணப்பட்ட தேஜஸ் மெய்யன்பர்களை தடுமாறச் செய்தது. பூதன் என்ற
சொல்லுக்கு ஆன்மா என்று பொருள். தன்னுயிர் போல் மண்ணுயிரைப் பேணிக்
காத்து வந்ததால் அக்குழந்தைக்கு பூதத்தாழ்வார் என்ற பெயர் நிலைத்தது.
அனைத்துக் கலையிலும் வல்லவராக விளங்கினார். எம்பெருமானையே அல்லும் பகலும்
மனத்தில் வைத்து வழிப்பட்டு வந்தார். திருமகள் அவரது நாவில் நின்று
நர்த்தனமாடினாள்.
செந்தமிழைச் செழிக்கக் கற்று பைந்தமிழ்ப் பாசுரங்கள் பல பாடியருளினார்.
எப்போதும் பரமன் புகழ் பாடும் பூதத்தாழ்வாரைச் சுற்றி அன்பர் கூட்டம்
தேன் உண்ணும் வண்டாக கூடி இருந்தனர்.
திருமாலின் மீது இவர் கொண்ட பக்தியைக் காட்டும் இவரது பாடல்களிலே
இவருடைய தமிழ்ப் பற்றும் புலப்படுகின்றது.
'நமோ நாராயணா' என்னும் எட்டெழுத்து மந்திரம் தான் பேரின்பத்தை எட்டிப்
பிடிப்பதற்கு ஏற்ற வழி என்பதை தானும் உணர்ந்து உலகத்தாரையும் உணரச்
செய்தார். உட்காரும் போதும், நிற்கும் போதும், உறங்கும் போதும், நடக்கும்
போதும், உண்ணும் போதும் எம்பெருமானையே எண்ணி மகிந்தார் பூதத்தாழ்வார்.
கடல்மல்லையில் பள்ளிக் கொண்ட பெருமானை அல்லும் பகலும் பைந்தமிழ்
பாசுரங்களால் பாடி பரவசமடைந்த பூதத்தாழ்வாருக்கு தொண்டை மண்டலத்திலுள்ள
மற்ற திருத்தலங்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
சுற்றிருக்கும் திவ்ய க்ஷேத்திரங்களுக்கு தொடர்ந்து சென்று எம்பெருமானை
தரிசித்து வந்தார். உலகளந்த பெருமானை தரிசிக்க ஆசை கொண்டிருந்த அவரின்
ப்ரார்த்தனையை அறிந்திருத்த பரந்தாமன் திருக்கோவிலூருக்கு வரும் படி
அவருக்கு கனவில் உரைத்தார். திருமாலவனை பற்றிய ஆனந்த பரவசம் கொண்டு
திருக்கோவிலூர் சென்றார் அவர்.
அக்கோவிலுக்குச் சென்று தரிசித்து விட்டு பகல் பொழுது போக்கி இரவு ஆனபோது
இடியும் மழையும் சூறைக்காற்றும் பலமாக அடித்ததைக் கண்டு, இரவு
தங்குவதற்கு இடம் தேடினர். அப்போது அவரது கண்ணுக்கு ஒரு வீ டு தென்படவே
அதை நோக்கி விரைந்து அங்கு போய் தாளிட்டிருக்கும் கதவைத் தட்டினார்.
இறைவனின் நாடகம்
முதலாழ்வார்கள்
இவர் பொய்கையாழ்வார், பேயாழ்வார் எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில்
வாழ்ந்தவராவார்.இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத்
துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள்.
உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில்
ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே
சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.
இந்து சமயத்தாரால் நம்பிக்கையுடன் போற்றப்படும் இவ்வரலாறு சுவை மிகுந்தது.
இறைவன், இவர்களால் உலகை உய்விக்கக் கருதி, திருக்கோவலூரில், ஒரு வீட்டின்
இடைகழியில் மழை பெய்யும் ஒரு நாள் இரவில், இம்மூவரையும் ஒருங்கு
சேர்த்துத்தானும் அவர்கட்கிடையில் நான்காமவராக இருந்து இருளில்
நெருக்கத்தை உண்டுபண்ணினான்.
நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், பொய்கையார் பூமியாகிற
தகழியில் கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார்.
பூதத்தார் அன்பாகிய தகழியில் ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய
திரியில் ஞானவிளக்கை ஏற்றினார். இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல,
நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார்.
பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.
அவ்வானந்தம் உள்ளடங்காமல் மேலே வழிந்து செய்யுள் வடிவமாக வெளி
வரலாயிற்று. அச்செய்யுள் தொகுதியே முறையே முதல் திருவந்தாதி
(பொய்கையாருடையது), இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாருடையது), மூன்றாம்
திருவந்தாதி (பேயாருடையது) எனப்பெயர் பெற்றன.
இறைவனின் நாடகம் உண்மையில் நடந்தது என்று இந்து சமயத்தார் நம்புவதற்கு
இம்மூன்று திருவந்தாதிகளிலுள்ள பாடல்களே முக்கிய சான்றுகளாகின்றன.
அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.
மாலே. நெடியானே. கண்ணனே, விண்ணவர்க்கு
மேலா. வியந்துழாய்க் கண்ணியனே, - மேலால்
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்
அளவன்றால் யானுடைய அன்பு.
பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்.
திருச்சிற்றம்பலம்.
R .வஜ்ஜிரவேலு
18/08/2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக