ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

குரு வணக்கம்!!



எனது குரு ஸ்ரீமான் S. N.ராஜசேகரன் அவர்களுக்கு குரு வணக்கம். 

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே--திருமந்திரம்.

தாங்கள் ஜ்யோதிஷத்தின் அதிசயத்தையும் ஆழத்தையும் ஈடுஇணையில்லா உயர்வையும் ஒருங்கே காண என் பரமார்த்த குரு ஸ்ரீமான் S.N.ராஜசேகரன் அவர்களின் வெப்சைட் முகவரியில் log in செய்யுங்கள்.
http://www.astroflux.com 
Add caption







திருப்பல்லாண்டு!

thiyagaboomi.blogspot.in

பெரியாழ்வார் அருளிச்செய்த
திருப்பல்லாண்டு

காப்பு
குறள்வெண்செந்துறை

1:
பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு.


அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிரு
த்தம் 1.

2:
அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே. (2)

3:
வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோ ம்
ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை
பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதமே. 3

4:
ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ
நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே. 4

5:
அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு
தொண்டக்குலத்திலுள்ளீர். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி
பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே. 5.

6:
எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. 6.

7:
தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி
பாய சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 7.

8:
நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே. 8.

9:
உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 9.

10:
எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய
பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே. 10.

11:
அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே. நானும்உனக்குப்பழவடியேன்
நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி
பல்வகையாலும்பவித்திரனே. உன்னைப்பல்லாண்டுகூறுவனே. (2) 11.

12:
பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே. (2) 12.


தொகுப்பு
 R.வஜ்ஜிரவேலு.

சிவபுராணம்


(திருப்பெருந்துறையில் அருளியது
தற்சிறப்புப் பாயிரம்)

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்.
R. வஜ்ஜிரவேலு

மிளகு ஒரு முழுமையான மருந்து!

 

“பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்" என்பது பழமொழி.

அந்த அளவிற்கு மிளகு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. மிளகானது
தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற
வைட்டமின்களும் மிளகில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் நரம்புத்
தளர்ச்சி, நரம்புக் கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம்
தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்
தொடர்ந்து செய்து முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.
 
 மிளகில் எளிதில் ஆவியாகும் எண்ணெய், ஆல்கலாய்டு,புரதம், கனிமங்கள் உள்ளன. பிபிரைன்,பெருபிரைன்,பிபிரோனால்,கேம்ஃபினி,அஸ்கோர்பிக் அமிலம், கரோட்டின் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறு உடனே குணமாகிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத்
தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. உணவும் நன்கு செரிக்க
ஆரம்பிக்கிறது. காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது.
 
 தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் பத்து கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு
வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். ஜலதோஷத்துடன் கூடிய
காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம்.


நினைவுத்திறன் அதிகரிக்கும்:

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக்  குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில்அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

உடல்வலி போக்கும் மிளகு:

உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது. அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடமிட நல்ல பலன் கிடைக்கும்

சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத்
தூளை சம அளவாக சுக்கு சிறிது நல்லெண்ணெய் கலந்து  மிதமாக சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.

பல்வலி போக்கும்:

பல்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில
நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில்
தயாரித்துப் பல்துலக்கி வரவும்.

விஷமுறிவாகும் மிளகு:

மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன் படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் இடித்து கசாயமிட்டு
குடித்து வர சகல விஷக்கடிகளும் முறியும். மிளகுடன் வெற்றிலை சேர்த்து
லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர
மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

பூச்சிவெட்டு குணமடையும்:

சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப்
புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும்
அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு  உள்ள
இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.?

மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும்.
 
இப்படிக்கு 
R. வஜ்ஜிரவேலு

இடுப்பு வலி, கழுத்துவலி, முதுகுவலி

பொதுவாக நாம் அனைவரும் அன்றாடம் தலைவலி, இடுப்பு வலி, கழுத்துவலி, முதுகுவலி போன்ற ஏதாவது ஒரு வலியால் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கிறோம்.

இதற்கு தனிப்பட்ட பல காரணங்கள் இருப்பினும் இந்த வலிகளுக்கு காரணம் வாதம் பித்தம் கபம் ஆகியவற்றின் சீர்கேடுஆகும். இதில் இருந்து யாரும் தப்ப
முடியாது என்பதுதான் உண்மை.

இரண்டு எலும்புகள் சேர்ந்து ஒரு மூட்டை உருவாக்குகின்றன. அந்த
மூட்டுக்குள் நரம்புகள், ரத்தக் குழாய்கள், திரவங்கள் என்று பல மாதிரியான
அமைப்புகள் உடலில் இடத்திற்கு இடம் மாறுபட்டு அமைந்துள்ளது.
பெரும்பாலானோர் அன்றாடம் பாதிக்கப்படுவது முதுகு வலியால்தான்.

நாம் நேராக நிமிர்ந்து நடக்க, நிற்க உதவுபவை முதுகுத் தண்டும் அது
சார்ந்த எலும்புகளும்தான். அதனூடேதான் மூளை தொடர்பான தண்டுவடம் சென்று அத்தனை உறுப்புகளிலிருந்து வரும் தகவல்களை மூளைக்கு கொண்டு செல்ல பயன்படுகிறது.

இந்த தண்டுவடத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கும் எலும்புகள் மொத்தம் 32. இந்த எலும்புகளுக்கு இடையே மூட்டுகளும் அதில் ஈரத்தன்மையுடனான சவ்வுகளும் இருப்பதால், நாம் அசையும்போதும், குதிக்கும்போதும், இரு சக்கரவாகனத்தில் பயணம் செய் யும் போதும், ஆட்டோவில் செல்லும்போதும் என குதிகாலில் அதிர்வுகள் ஏற்படாது இருக்க உதவுகிறது.

குண்டு – குழியான பாதையில் இரு சக்கர வாகனத்தில் அடிக்கடி வெகுதூரம் பயணிப்பது,  இருக்கையில் நேராக சரியான நிலையில் உட்காராமல் இருப்பது, முறையற்ற உடற்பயிற்சி, அல்லது உடற்பயிற்சியே இல்லாமை, எலும்புகளில் ஏற்படும் calcium (சுண்ணாம்புச்சத்து) குறைவு, சரியாக குணப்படுத்தப்படாத வாயுக் கோளாறு, மலச்சிக்கல், முதுமை ஆகியவை காரணமாக இந்த மூட்டுக்கள் பாதிக்கப்பட்டு கழுத்து, இடுப்பில் வலி ஏற்படும். இடுப்பு, கழுத்து தலைப்பகுதிகளில் தீவிர வலி, தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு இவற்றுடன் எலும்புத் தேய்வு, காரணமாக அவ்விடத்தில் வெற்றிடம் ஏற்படும்.

 வெற்றிடத்தில் வாதம் (வாயு) தங்கி இடுப்பு  பிட்டம்,
பின்னங்கால் தொடைப் பகுதிகளில் வலி ஏற்படக் கூடும். காலை உயர்த்தும்போது வலி கூடும். கழுத்துஎலும்பு தேய்மானம் அடையும் நிலையில் கைகளில் வலியும், உள்ளங்கையில் மரத்துப்போன உணர்வும், சில நேரங்களில் எறும்பு ஊறுவது போன்றும், எரிச்சல் போன்றும் வலி ஏற்படும்.

மூட்டுகள் நகர்வின் அளவு திசை மற்றும் எந்தப் பகுதி மூட்டு்க்கள்
பாதித்துள்ளன? என்பதைப் பொருத்து வலியும் வேதனையும் மாறுபடும். நோயாளியை  "நாடி" பார்த்து பரிசோதனை செய்வது, எக்ஸ்ரே படம் ஆகியவை மூலம் பாதிப்பைத்  துல்லியமாகக் கணிக்கமுடியும்.

உணவு, உடற்பயிற்சி, உள் மருந்து, புற மருந்து என சித்தா  மற்றும்
ஆயுர்வேதமருத்துவத்தில் கூட்டு சிகிச்சை மூலம் இடுப்பு, கழுத்து வலி,
மூட்டு பிறழ்தல் போன்ற பிரச்சினையை நிரந்தரமாக குணப்படுத்த முடியும்.

 வாழைக்காய், உருளைக் கிழங்கு, கருணைக்கிழங்கு, போன்ற கிழங்கு வகைகள், பட்டாணி, காராமணி, மொச்சை போன்ற பயறுவகைகள்,  அதிக புளிப்பு, தயிர் மற்றும் குளிர் பானங்கள் & (NEGATIVE FOOD) மாறுபட்ட உணவு வகைகள்ஆகியவற்றை இந்த நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக வாயு பிரச்சினையை ஏற் படுத்தக் கூடிய உணவுப் பொருட்கள்
அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

 உணவில் முடக்கறுத்தான் கீரை, இஞ்சி, புதினா, சுக்கு, மிளகு, பூண்டு
போன்ற வாயு நீக்கும் உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும்.  மூட்டுக்களின்
மேற்புறம் (மருந்து எண்ணை) தைலம் பூசுதல் நல்ல பலன் தரும்.

மருத்துவரின் ஆலோசனையுடன் கூடிய சரியான உடற்பயிற்சி மற்றும் யோகா சனங்கள் ஆகியவை சில நேரங்களில் கழுத்து, இடுப்பு வலி பிரச்சினையை உள் மருந்துகள் இல்லாமலே குணப்படுத்தும் ஆற்றல் பெற்றவை. அதனால் இவற்றை செய்யலாம்.

(யோகாசனம் குருவிடம் முறையாக கற்று செய்யவும்.)

சூரிய நமஸ்காரம், திரிகோணாசனம், வஜ்ராசனம், யோக முத்ரா, மகாமுத்ரா,
சலபாசனம், தனுராசனம், புஜங்காசனம், போன்ற ஆசனப் பயிற்சிகள் மருந்துகளுடன் சேர்ந்து நோயை விரைவில் குணப்படுத்த உதவும்.

 கழுத்து, இடுப்பு, முதுகு எலும்பு வலி பிரச்சினை வந்து விட்டால் அச்சம்
கொள்ளத் தேவையில்லை. ஆயுர்வேத மருத்துவம் & சித்த மருத்துவம் அதன்
பிரிவான தொக்கண மருத்துவம், வர்ம மருத்துவம் ஆகியவை மூலம் வலியை குறைத்து முழுநிவாரணத்தைப் பெறலாம்.

வலி நிவாரண மாத்திரைகள் வயிற்றைக் கெடுத்து அல்சரை உண்டாக்கும். அதனால் எச்சரிக்கை தேவை. சித்த மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருந்துகள் முழுமையான பலனைத் தரும். வலிகளைக் குறைப்பதோடு தசைகளை இலகுவாக்கி நிரந்தரமாக குணப்படுத்தும். ஆங்கில மருந்துகளும் உடனடி பலனை அளிக்கும். மேற்குறிப்பிட்ட நோய்களுக்கு மருத்துவம் நிரந்தர நிவாரணம் அளிக்கும் என்பது நிச்சயம். எனவே அச்சம் தேவை யில்லை.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

திருக்குறள்:

மருந்து என்பது வேண்டாவாம் யாக்கைக்கு
அருந்தியது அற்றது போற்றி உணின்.

இப்படிக்கு
R.வஜ்ஜிரவேலு.

வாயுத் தொல்லை வராமல் இருக்க!

இன்றைய நவீன காலத்தில் உணவு என்பது எதோ உயிர்வாழ என்று நினைத்து அவசர கதியில் தயாரித்த உணவுகளை சாப்பிட்டு அவசர அவசரமாக
சென்றுகொண்டிருக்கின்றனர். இதனால் வயிற்றில் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, அதனால் அபானவாயு சீற்றமாகி குடலில் புண்களை ஏற்படுத்திவிடும். இவர்கள் துவர்ப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

வாயுத் தொல்லை என்பது பொதுவாக 35 வயதைக் கடந்த அனைத்து தரப்பினருக்குமே இருக்கக்கூடிய ஒரு இன்னல் எனலாம். ஒரு சிலருக்கு சிறிய அளவு உருளைக்கிழங்கை சாப்பிட்டாலே இந்த வாயுத் தொல்லை ஏற்படும். வேறு சிலருக்கு பருப்பு மற்றும் அவற்றில் செய்யப்படும் பதார்த்தங்களினால் வாயுத் தொந்தரவு உருவாகும். வாயுத்தொல்லைக்கு ஏற்ற அருமருந்து வெள்ளைப் பூண்டு. முடிந்தால் அப்படிய 4 பல் பூண்டை தோலுரித்து சாப்பிடலாம். அல்லது அடுப்பில் வைத்து சிவக்கும் அளவுக்கு சுட்டு, பின்னர் அதன் தோலை உரித்து பாலுடன் சேர்த்து உண்ணலாம்.

 வாயுத்தொல்லை இருப்பவர்கள் பூண்டு சாப்பிட்ட உடனேயே அதில் இருந்து
விடுபட்டதை உணரமுடியும். வேண்டுமானால் பூண்டு காரம் போக, மோர்
அருந்தலாம். பொதுவாக உணவுக்குப் பயன்படுத்தும் குழம்பில் வெள்ளைப்பூண்டை அன்றாடம் சேர்த்துக் கொள்வது சிறந்தது. பெண்கள் குழந்தை பெற்ற பின் அதிகளவு சோர்வு இருக்கும் என்பதால், வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் பூண்டு குழம்பை சாதத்துடன் கொடுப்பார்கள். தவிர தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பூண்டு மிகவும் சிறந்ததாகும்.
எனவே பூண்டை அன்றாடம் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ளப் பாருங்கள்.

விளாம்பழ  மரத்தின் இலையை காயவைத்து இடித்து.5 கிராம் தூளை சுடு
தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் உடனடியாக வாயுத் தொல்லை நீங்கும்.

மோருடன் சீரகம் இஞ்சி சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

உடலுக்கு குளிர்ச்சியும், சருமத்தை பளபளப்பாக வைக்கும் ஆற்றலும்
சீரகத்திற்கு உண்டு. சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல
மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால்,
வயிற்றுப் பொருமல் போய்விடும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

மணத்தக்காளி கீரைiயும், வெங்காயத்தையும் , தக்காளியையும் பொடீயாக நசுக்கி மிளகு தூளும் உப்பும் சேர்த்து கொதிக்க வைத்து சாறாக குடித்தால்
வாய்ப்புண், குடல் புண், வாயுத் தொல்லை முழுமையாக நீங்கி விடும்.

இதற்கு மிக முக்கியம் குறிப்பிட்ட நேரத்தில் உண்பது. எந்தப் பொருட்கள்
சாப்பிட்டால் வாயு ஏற்படும் என்று உங்களுக்கே ஓரளவு தெரிந்திருக்கும்.
அந்தப் பொருட்களை தயவு தாட்சண்யமின்றி விட்டு விட்டுங்கள். சிலருக்கு
பால் பால்சார்ந்த பொருட்கள் கூட வாயுத் தொல்லையைக் கொடுக்கும். மொச்சை வகைகள், முட்டை கோஸ், காலி ப்ளவர், உருளைக் கிழங்கு, வாழைக்காய், பருப்பு வகைகள் வாயுத் தொல்லையை உண்டாக்கும்.

சமைக்கும் போது, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பது வாயுவைக் குறைக்கும். அதிகக் கொழுப்பு, அதிக நார்சத்துப் பொருட்கள் செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகிறது. அவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். நார்சத்து உணவு செரிமானத்திற்கு உதவினாலும், குடலில் நீண்ட நேரம் தங்குவதால் வாயுவை உண்டுபண்ணுகிறது. ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடாமல், சமமான இடைவெளியில் குறைந்த அளவு சாப்பிடுங்கள். நீண்ட நேரப் பட்டினி வேண்டாம். சாப்பிடும்போது ஆத்திரம் அவசரம் கூடாது. உணவை நிதானமாக மென்று  தின்னுங்கள்.  இதனால் செரிமானம் நன்றாக ஆவதுடன், வாயு தோன்றுவதும் தடுக்கப்படுகிறது.

புதிதாக சமைக்கப்பட்ட உணவை உண்ணவும். காபி, தேநீர், ஆல்கஹால் முதலியவற்றை அதிகம் குடிக்காமல் ஒரு அளவில் நிறுத்திக் கொள்ளலாம். அதிகப்படியான வேலை, டென்ஷன், மனதில் தோன்றும் பய உணர்வு இவை போன்றவையும் செரிமானத்தை பாதிக்கும். புகைப் பழக்கம், குடிப்பது இவையும் வயிற்றுக்குப் பகைவர்கள்.

அதிகக் காரம், மசாலா, எண்ணையில் பொறித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். இரவு நேரம் கழித்து உண்பது வேண்டாம்.
அசிடிட்டிக்கென்று எடுத்துக் கொள்ளும் மருந்துகளை அடிக்கடி
சாப்பிடவேண்டாம். முதலில் குணம் ஏற்படுவதுபோல தோன்றினாலும் நாளடைவில் வயிற்றைக் கெடுத்துவிடும். அதேபோலே வலி நிவாரணிகளும் வயிற்றுக்கு  நல்லதல்ல.

தினசரி உடற்பயிற்சி செய்வதும் அவசியம். சாப்பிட்டவுடன் சிறிது நடக்கலாம்.
சிலசமயம் இதய நோய்க்குண்டான அறிகுறிகள், வாயுத்தொல்லைக்கு உண்டான அறிகுறிகள் போலவே இருக்கும். எந்த ஒரு உடல் பாதிப்பானாலும் மருத்துவர் உதவியை நாடுவது நல்லது. வாயுத் தொல்லைதானே என்று நினைத்து அலட்சியப் படுத்தவேண்டாம். ஆரம்ப நிலையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் பல நோய்களை முற்றவிடாமல் நம்மை நாமே பாது காத்துக் கொள்ளலாம்.

நாம் போடும் உணவைத் தின்று நமக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கும் நம்
வயிற்றை நாமே கெடுத்துக் கொள்ளலாமா? நிதானமாக சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழலாம்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (ஜனவரி 23, 1897) -  இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார்.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து
விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்றும் அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல்
இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.

1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்தது, நேதாஜி அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது.

இந்தியாவில் ஒரிசா (இன்றைய ஒடிசா) மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில்
1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள் வங்காள இந்து குடும்பத்தில் சுபாஸ்
சந்திரபோஸ் பிறந்தார். 27 தலைமுறையாக இவரது தந்தையின் குடும்பம் வங்க மன்னர்களின் படைத்தலைவர்களாகவும் நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும்  பணியாற்றி வந்த பெருமையை உடையது. பிரபாவதிதேவி இவரது தாயார்.   "தத்" எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவர். 8 ஆண் பிள்ளைகளையும் 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில் சுபாஸ் சந்திரபோஸ் ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்தவர்.

இளமையில் சுபாஷ் சந்திர போஸ்:

ஐந்து வயதில் கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில்
இணைந்த சுபாஷ் ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார். பின்னர்  கொல்கத்தாவில் தன் உயர் கல்வியை ரேவன்ஷா கல்லூரியில் தொடங்கிய சந்திர போஸ் 1913 ஆம் ஆண்டுத் தேர்வில் கொல்கத்தா பல்கலைக்கழக எல்லைக்குள் 2 ஆவது மாணவராகத் தேறினார். இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும் சிறு வயது முதலே விவேகானந்தர் போன்ற ஆன்மிக பெரியார்களின் பால் ஈடுபாடுடையவராயும் அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராயும் இருந்தார். இதனால் ஞான மார்க்கத்தின் பால் ஈடுபாடு கொண்டார்.

 துறவறத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். எதிலுமே பற்றற்று இருந்ததுடன் தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ் தன் ஞானவழிக்கான ஆசானைத் தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார். துறவறப் பாதையில் செல்ல விரும்பிய சுபாஸ் சந்திரபோஸ் ஞான மார்க்கத்திற்கு ஏற்ற குரு கிடைக்காததால் தன் மானசீக ஆசானாக விவேகானந்தரையே ஏற்று வீடு திரும்பினார்.

  தந்தையாரின் வேண்டுகோளிற்கு இணங்கி  கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் 1915 ஆம் ஆண்டுசேர்ந்தார். அக்காலத்தில் ஆங்கில இனவெறி மிக்க வரலாற்று ஆசிரியரான சி. எப். ஓட்டன் என்ற ஆசிரியர் அங்கு கற்பித்தார். அவர் கல்வி கற்பிக்கும் நேரங்களில் பெரும்பாலும்
இந்தியர்களை அவமதித்து வந்தார். இவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக சுபாஸ் சந்திர போஸும் அவரது நண்பர்களும் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன் இரண்டு ஆண்டுகள் வேறெந்த கல்லூரிகளிலும் படிப்பை தொடரமுடியாது செய்யப்பட்டனர்.

இதனால் தன் கல்வியை ஓராண்டுகாலம் தொடர முடியாதிருந்த சுபாஷ், சி. ஆர். தாஸ் என்று அறியப்பட்ட சித்தரஞ்சன் தாஸ் மற்றும் சிலரின் உதவியுடன் 1917 ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1919 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன்
மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார்.

 
அக்காலத்தில் நாட்டுச் சூழ்நிலை பற்றி அடிக்கடி வீட்டில் விவாதங்களில்
ஈடுபட்ட சுபாசைப் பார்த்த அவரது தந்தையார் இவரை அரசியலில் ஈடுபடுத்த
விரும்பாது லண்டனுக்கு ஐ.சி.எஸ் தேர்வுக்குப் படிக்க அனுப்பி வைத்தார்.
தன் படிப்பை தொடர்ந்த போஸ் லண்டனில் நடந்த 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான ("இந்தியக் குடிமைப் பணி" எனப்படும் ஐசிஎஸ் தேர்வு)
நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாகத் தேர்ச்சி
பெற்றிருந்தார். ஆனால் தன் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும்
ஆங்கிலேயனிடம் வேலை செய்யக் கூடாது எனக் கருதி, தான் முயற்சியுடன்
படித்துப் பெற்ற தனது பதவியை லண்டனிலேயே பணித்துறப்பு செய்தார்.

சுதந்திரப் போரில் ஈடுபாடு

வழக்குரைஞரான சி. ஆர். தாஸ் தன் தொழிலை விட்டுவிட்டு ஒத்துழையாமை
இயக்கத்திற்குத் தலைமை தாங்கி தேசப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சுபாஷ் கடிதம் மூலம் சி.ஆர்.தாசிடம் தான் தாய் நாடு திரும்பியதும் இந்திய
சுதந்திரப் போரில் பங்கேற்க ஆலோசனை கேட்டிருந்தார். அதை ஏற்று சுபாஷ்
சந்திர போஸ் வருவதாயிருந்தால் தான் ஏற்றுகொள்வதாகவும் பதவி துறந்ததைப் பாராட்டியும் சி. ஆர். தாஸும் மறுகடிதம் அனுப்பினார்.

இக்காலகட்டத்தில் தான் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியிருந்த
காந்தியும் இந்திய அரசியலில் ஈடுபட்டார். இந்திய மக்களும் காங்கிரசின்
தலைமையின் கீழ் சுதந்திர எழுச்சி பெற்றிருந்தனர். 1921 ஆம் ஆண்டு மும்பை
துறைமுகத்தில் வந்திறங்கிய சுபாஷ் சந்திரபோஸ்  அப்போது மும்பையில்
தங்கியிருந்த காந்தியையும் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் கலந்தாலோசித்தார்.

போஸ் சித்தரஞ்சன்தாஸின் கீழ் தொண்டாற்றவே விரும்பினார். போசை ஏற்று கொண்ட சி.ஆர்.தாஸும் அவரின் திறமையை நன்கு அறிந்திருந்ததுடன் திறமைமிக்க அவரது குடும்ப பின்னணியையும் அறிந்திருந்தார். இதனால் சி.ஆர்.தாஸ் தான் நிறுவிய "தேசியக் கல்லூரியின்"  தலைவராக 25 வயதே நிரம்பிய போஸை நியமித்திருந்தார். லண்டனில் கேம்பிரிட்ஜில் படிக்கும் போது மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் நன்கு கற்றிருந்த சந்திரபோஸ் தன் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சி பொங்கும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றியதுடன் பாடமும் கற்பித்தார்.

அரசியல் நுழைவு

1922 இல் வேல்ஸ் எனும் இளவரசரை இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டன் அரசு
தீர்மானித்து இருந்தது. இந்தியாவிலிருந்த பிரிட்டன் ஆதிக்கக்காரர்களும்
வேல்ஸ் இளவரசரை வரவேற்க நாடு முழுதும் சிறப்பான ஏற்பாடு
மேற்கொண்டிருந்தனர். ஆனால் சுயாட்சி அதிகாரத்தைத் தரமறுத்த பிரிட்டன்
இளவரசரின் வருகையை இந்திய மக்களும் காங்கிரசும் புறக்கணிக்க முடிவு
செய்திருந்தனர். மும்பை துறைமுகத்தை வேல்ஸ் இளவரசர் வந்தடையும் போது நாடு  முழுதும் எதிர்க்க காந்தி அழைப்பு விடுத்தார். இதனால் சினமுற்ற ஆங்கில அரசாங்கம் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்றவற்றுக்குத் தடை  விதித்தது.

இவ்வாறு பொதுகூட்டங்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்த போதும் வேல்ஸ் இளவரசர் கொல்கத்தாவுக்கு வருகை தரும் போது கல்கத்தாவில் மறியல் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்து. கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக சந்திரபோஸை நியமித்திருந்தது. தீவிரத்தை அறிந்திருந்த ஆங்கில அரசு போஸின் தலைமையிலான தொண்டர் படையை சட்ட விரோதமானது என அறிவித்து, போஸையும் சில காங்கிரஸ் தொண்டர்களையும் கைது செய்தது. மேலும் அவருக்கு 6 மாத காலச்
சிறைத்தண்டனையும் கிடைத்தது. சில நாட்களின் பின்னர் ஜவகர்லால் நேரு,
சித்தரஞ்சன் தாஸ் போன்றோரும் கைதானார்கள்.

ஆறு மாதம் கழித்து போஸ் 1922 ஆம் ஆண்டு அக்டோபரில் விடுதலையானபோது காந்தியும் ஒத்துழையாமை இயக்கத்தையும்,
வரிகொடா இயக்கத்தையும் விரிவுபடுத்தியிருந்தார்.

இடையில் சில காரணங்களுக்காக போராட்டத்தை நிறுத்தியதால் காந்திக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்தன. 1922 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியான சித்தரஞ்சன் தாஸ் கயையில் கூடிய காங்கிரஸ் மகாசபைக்குத் தலைமை தாங்கினார். சட்ட சபைத் தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்டு
சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் தான் இந்திய சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர்.தாஸும் மோதிலால் நேருவும் கருதினர். ஆனால் இதை காந்தி ஆதரவாளர்கள் எதிர்த்தனர். தாஸுக்கும் காந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காந்தியின் வழிமுறைகளை தாஸ் கண்டித்தார்.
காங்கிரஸில் இருந்தபடி சுயாட்சிக் கட்சி என்ற அமைப்பை தாஸ் தொடங்கினார். "சுயராஜ்யா" என்னும் பத்திரிகையை ஆரம்பித்து ஆசிரியர் பொறுப்பை போஸிடம் ஒப்படைத்தார்.

ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் உத்தம்சிங் சுட்டுக் கொன்றார். காந்தி அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். ஆனால், உத்தம்சிங்கைப் போஸ் பாராட்டி கடிதம் அனுப்பினார்.இந்தச் சம்பவம் காந்திக்கும் போஸுக்கும் இடையிலான உரசலை  அதிகரித்தது.

1928 ல் கொல்கத்தாவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாடு காந்தி தலைமையில் கூடியது. சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய காந்தியின் முடிவை போஸ்  தவறு என எதிர்த்தார். போஸின் முடிவை நேரு ஆதரித்தார். இதனால் இருவரும் இணைந்து காங்கிரஸில் இருந்தபடி விடுதலைச் சங்கம் என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தினர். இதனால் காரிய கமிட்டியில் இருந்து போஸ் நீக்கப்பட்டார். அவரைப்போல் சென்னை மாகாணத்தை சேர்ந்த சீனிவாச அய்யரும் நீக்கப்பட்டார். உடனே போஸ், காங்கிரஸ் மிதவாதிகள் கைக்கு போய்விட்டது; அங்கு எங்களுக்கு வேலையில்லை  எனக் கட்சியிலிருந்து விலகி, சீனுவாச அய்யரைத் தலைவராகக் கொண்டு
'காங்கிரஸ் ஜனநாயக கட்சி'யைத் தொடங்கினார்.

அரசியல் பணி

காங்கிரஸ் ஜனநாயக கட்சியின் "பார்வட் " எனும் ஆங்கில இதழில் ஆசிரியாரான நேதாஜி உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார். இதைத் தொடர்ந்து  தேர்தல்களில் மத்திய மாகாணசபைக்கும்,கல்கத்தா மாநகராட்சிக்கும் நடைபெற்ற தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றிபெற்றது. 1924-ல் மாகாண சபைக்கு மேயராக சி.ஆர்.தாஸும் மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக போஸும் தெரிந்தெடுக்கப்பட்டனர். கொல்கத்தா நகரில் பல சீர்திருத்தங்கள்  மேற்கொண்டதுடன் மக்கள் ஆதரவையும் பெற்றனர்.


இதனைக் கண்ட ஆங்கிலேய அரசு, நேதாஜியை ஓர் அவசரச்சட்டத்தின் மூலம் 1924 ஆம் ஆண்டு ஐப்பசி 25 ஆம் நாள் கைது செய்து கொல்கத்தா மத்திய சிறையில் அடைத்தது. மேலும் வங்கத்தில் பிரிட்டன் ஆட்சியை கவிழ்க்க சதிகார இயக்கம் ஓன்று தோன்றி இருப்பதால் அதில் சிலரையே கைது செய்திருப்பதாயும் அறிக்கையை வெளியிட்டது. நேதாஜிக்கு ஆதராவாய் மக்களும் பல தலைவர்களும் நாடு முழுதும் முழங்கினர். கொல்கத்தா விரைந்த காந்தி உட்பட பல தலைவர்களும் நேதாஜிக்கு ஆதரவை தெரிவித்தனர். இச்சமயத்தில் தான் சுயராஜ்ஜியக் கட்சி சட்டசபைகளில் வெற்றி பெற்று ஆற்றி வந்தசீர்திருத்தங்களையும் பணிகளையும் கண்ணுற்ற காந்திஜி 'சட்டசபை வெளியேற்றம்' எனும் கொள்கையைக் கைவிட்டு சுஜராட்சிய கட்சியின் கொள்கையே காங்கிரசின் கொள்கை எனக் கூறி இரு கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை முடித்து வைத்தார்.

போஸிற்கு ஆதரவான போராட்டங்கள் வலுப்பதை கண்ணுற்ற பிரிட்டிஷ் அரசும் அவரை கடல் கடந்து மாண்டலே சிறைக்கு மாற்றியது. அங்கு காலநிலைகளுடன் நேதாஜியின் உடல்நிலை ஒத்து வராததால் அவர் காசநோய்க்கு ஆளாக நேர்ந்தது. நோயின் தீவிரம் அதிகரித்ததால் சுபாஷும் படுத்த படுக்கையானார். ஆனால் அரசு மருத்துவ பரிசோதனைக்குகூட அவரை அனுமதிக்கவில்லை. இதனால் காங்கிரசஸ் அவரை
வெளிக்கொணர ஒரே வழி 1926 ஆம் ஆண்டு தேர்தலில் நேதாஜியை சட்டமன்ற வேட்பாளராய் அறிவிப்பதுதான் என்று முடிவு செய்தது நேதாஜியும் தன் சேவையைக் கருதி அதற்கு உடன் பட்டார். இதனால் சிறையிலிருந்தவாறே வேட்பாளர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.


ஆனால் அரசு அவ்வறிக்கையை வெளியிட மறுத்துவிட்டது. வேட்பாளரும், வேட்பாளர் தேர்தல் அறிக்கையும் வெளிவரவில்லை. ஆனால் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நேதாஜி வெற்றி  பெற்றார். துளியும் அசைந்து கொடுக்காத அரசோ நேதாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு "கொல்கத்தா வராமல் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்று
விடவேண்டும் 1930 வரை அவர் அங்கேயே இருக்க வேண்டும்" என்றும் இதற்கு போஸ் சம்மதித்தால் விடுதலை செய்ய தயார் என அறிக்கை விட்டது. ஆனால் ஆங்கிலேயர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிய விரும்பாத நேதாஜி இதற்கு முற்றிலும் மறுத்துவிட்டார்.

சிறையிலேயே இருந்ததால் நோய் அதிகரித்து நேதாஜியைப் படுக்கையில் தள்ளீயது.  நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அரசாங்கம் அல்மோரா சிறைக்கு சந்திரபோஸை கொணர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்க சம்மதித்தது. ஆனால் நேதாஜியின் உடல் நிலையின் மோசம் கருதி அவர் இனி பிழைக்கப் போவதில்லை எனத் தீர்மானித்த அரசாங்கம் அவரை நிபந்தனை இன்றி விடுதலை செய்தது. கல்கத்தா திரும்பியதும் படுக்கையிலேயே தன்னை வெற்றியடைய வைத்த மக்களுக்கு நன்றி கூறி ஓர் அறிக்கை விடுத்தார் நேதாஜி. சிறையில் இருந்து வெளிவந்ததும் 1930 சுபாஷ் சந்திர போஸ் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார்.அங்கு முசோலினி போன்றோரைச் சந்தித்தார். 1938-ல் காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

 
இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப்  ஆங்கிலேய அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.

உலகப்போரின் ஆரம்பத்தில், பிரி ட்டன் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார்.
அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940
நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரும் விளைவுகள் ஏற்படும் என்பதைப் ஆங்கிலேய அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை  அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசியக் காவலர்கள் சாதாரண உடையில் 24 மணி நேரமும் கண்காணித்தபடி இருந்தனர். எப்படியும்
இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார்.
வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர்.

 1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நேதாஜி ஒரு முஸ்லிம் போல் தாடி
வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் ஒரு காரில் தப்பிச்சென்றார்.
கொல்கத்தாவிலிருந்து தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். பெஷாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்து இந்தியாவின் எல்லையைக் கடந்தார். பின்னர் ஆப்கானிஸ்தான் சென்றார். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டு இத்தாலிக்குச் செல்ல அனுமதி வாங்கினார். ரஷ்யா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப்
போய்ச்சேர்ந்தார். அவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி
ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து  மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விஷயமே ஆங்கிலேய அரசுக்குத் தெரிந்தது. ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார்.

 இந்திய தேசிய இராணுவம்

1941 ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கி ஆசாத்ஹிந்த் என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜனகனமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது என தெரிந்தபின் ஜப்பான் செல்ல
முடிவு செய்து, போர் காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் சென்று
ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது.


1943 அக்டோபர் 21ல் சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் போஸ், சுதந்திர அரசு
பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி தேசிய படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார். ஆனால் ஆங்கிலேய படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல் இப்படை தவித்தது. இந்தியாவின் எல்லைக்கோடு வரை மனம் தளராமல் வந்தவர்களை ஆங்கிலேய படை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இந்திய தேசிய படை தோல்வியைத் தழுவியது. அது மட்டுமல்ல ஜப்பான் இரண்டாம் உலக போரில் சரணடைந்தது. எனவே போரை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைக்கு ஆளானார் சுபாஷ் சந்திர போஸ் .

ஐரோப்பிய நாடுகளான செக்கோசிலோவாக்கியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி என பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளில் இருந்த இந்திய இளைஞர்களை சந்தித்து நாட்டின் விடுதலையை பற்றி பேசி ஒத்துழைப்பு கேட்டார். ஐரோப்பாவின் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் சந்தித்து விடுதலைக்கு உதவும்படி கேட்டார்.

  இரத்தத்தை தாருங்கள் உங்களுக்கு விடுதலையைப் பெற்று தருகிறேன் என்பதே இவரின் புகழ்பெற்ற சூளுரையாக  இருந்தது.

அரசியல் தத்துவம்

சுபாஷ் சந்திர போஸ் இங்கிலாந்துக்கெதிரான போராட்டத்திற்கான பெரும்
தூண்டுதல் மூலமாக பகவத் கீதையைக் கருதினார். சிறு வயதிலேயே இவரிடம் சுவாமி விவேகானந்தரின் சர்வமயவாதம் பற்றிய கற்பித்தலும் தேசியவாத, சமூக சிந்தனையும் சீரமைப்பு  எண்ணங்களும்  தாக்கத்தை ஏற்படுத்தின. இவரின் பின்னாளைய அரசியல், சமூக எண்ணங்களுக்கு இந்து சமய ஆன்மீக் கருத்துக்களே வித்திட்டதாக பல அறிஞர்கள் கருதுகிறார்கள். சுபாஷ் தன்னை சமதர்மவாதி என அழைத்துக்கொண்டார். இந்தியாவில் சமதர்மக் கொள்கையின் முன்னோடி சுவாமி விவேகானந்தர் என நம்பினார்.

பெண்ணுரிமை

இவர் தன் இந்திய தேசிய ராணுவத்தில் பெண்களுக்கென தனிப் பிரிவான ஜான்சி ராணி படையை தொடங்கியவர். ஒரு முறை ஜான்சி ராணி படை கூடாரப் பகுதிக்குள் இவர் நுழைந்ததை வேறு யாரோ என்று எண்ணி கோவிந்தம்மாள் என்னும் பெண் அதிகாரி அவரைத் தடுத்து நிறுத்தினார். அதைப் பொருட்படுத்தாமல் அவருக்கே அப்படையின் உயரிய விருதான லாண்ட்சு நாயக் விருதை வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது..

 இறுதி உரை:
இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது ஆகத்து 15,
1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்தியா,
"நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள
இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த
தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக  இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட  காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!"
   

ஜெய்ஹிந்த்.
R.வஜ்ஜிரவேலு

திருக்கழுக்குன்றம் – யுகம் யுகமாய் வரும் இரண்டு வெள்ளை கழுகுகள்


திருக்கழுக்குன்றம் மாமல்லபுரம் செல்லும் வழியில்  இருக்கிறது.
திருக்கழுக்குன்றம் என்கிற பெயர் வந்த காரணம், இன்று வரை இந்த பகுதிக்கு இரண்டு வெள்ளை கழுகுகள் மதிய வேளையில் வருகிறது. சிறு குழந்தைக்கு உணவு ஊட்டுவது போல் அந்த இரண்டு கழுகுகளுக்கு  ஆலய குருக்கள் உணவு ஊட்டுவார்கள்.

யார் இந்த கழுகுகள்?

பிரம்ம புத்திரர்கள் எட்டு பேர், சாரூப பதவி வேண்டி கடும் தவம் இருந்தார்கள். சிவபெருமானும் இவர்களின் தவத்தை மெச்சி காட்சி கொடுத்தார். தங்கள் தவத்தை ஏற்று சிவன் வந்ததை கண்டு பேரானந்தம் அடைந்து, பதட்டத்தில் சாரூப பதவி வேண்டும் என்று கேட்பதற்கு பதிலாக சாயுச்சிய பதவிவேண்டும் என்று கேட்டுவிட்டார்கள்.

“நீங்கள் 8 பேர். இரண்டு இரண்டு பேர்களாக பிறந்து இறைவனுக்கு பணி
செய்வீர்கள்.” என்று சிவன் இவர்களுக்கு வரம் தந்தார். இவர்கள்தான் முந்தய
யுகங்களில் சண்டன், பிரசண்டன் எனவும், சம்பாதி, சடாயு எனவும்,
சம்புகுந்தன், மாகுத்தன எனவும் இரண்டு இரண்டு பேராக கழுகுகளாக பிறந்து இறைவனை தொழுது வந்தார்கள். எட்டில் மீதி இரண்டு பேர் இந்த கலியுகத்தில் பூஷா, விதாதா என்ற இரண்டு கழுகுகளாக பிறந்து இன்றுவரை பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்கள்.

சரியாக பகல் பன்னிரெண்டு மணிக்கு இரண்டு கழுகுகள் திருக்கழுகுன்றம் வந்து ஆலய குருக்கள் கொடுக்கும் சர்க்கரை பொங்கலை சாப்பிடுகிறது என்பதை 03.01.1681 வருடம் டச்சுக்காரர்கள் இந்த அற்புத சம்பவத்தை ஆலயத்தின் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறார்கள். மலை அடிவாரத்தில் வேதங்கள் நான்கு சிகரங்களாக இருப்பதால் வேதகிரி என்ற பெயர் பெற்ற இடத்தில் வேதகிரி ஈஸ்வரர் ஆலயத்தை இரண்டு வெள்ளை கழுகுகள் வட்டமிட்ட பிறகுதான் உணவே உட்கொள்கிறது. இந்த இரண்டு கழுகுகளும் காசியில் கங்கையில் ஸ்நானம் செய்கின்றன. மதிய உணவு உண்ண திருக்கழுகுன்றம் வந்து உணவு சாப்பிட்டு,  இரவு இராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் நித்திரை செய்கிறது என்று ஸ்தல புராணம் சொல்கிறது.
 திருமூலச் சித்தரும் போகரும் சீனாவில் இருப்பார்கள், பிறகு சட்டென்று சதுரகிரியில் மக்களோடு மக்களாக நடந்து வருவார்கள் என்று  சித்தர் வரலாறு கூறுகிறது. அதுபோல் இன்றுவரை  பௌர்ணமி அன்று, நடுஇரவில்
பல முனிவர்கள் சிவனை நினைத்து பஜனை செய்து கொண்டே சதுரகிரியை வலம் வருவதையும் அவர்களின் குரல் இனிமையாகவும் உடலை சிலிர்க்க வைப்பதாக இருக்கிறதென்று சதுரகிரிக்கு வரும் பக்தர்கள் உணர்கிறார்கள்.

 வேதகிரி ஈஸ்வரர் ஆலயத்தின் கர்ப்ப கிரகத்தை பல்லவ மன்னவன் மகேந்திர வர்மன் மலையை குடைந்து  உருவாக்கினார்.

இந்திரன், தண்ணீராலும், புஷ்பங்களாலும் வேதகிரிஸ்வரருக்கு அபிஷேகம்
செய்யாமல் இடியாலேயே சிவனுக்கு பூஜை செய்கிறார். ஆனாலும் இன்றுவரை இந்த கோயிலுக்கு இடி-மின்னலால் எந்த பங்கமும் ஏற்படவில்லை. இதை ஒரு பாடலில் நிந்தாஸ்துதியாக சொக்கநாத புலவர் என்பவர் சொல்லி இருக்கிறார்.

வேதகிரிஸ்வரரை வணங்கிய பிறகு மலையை விட்டு இறங்கி வரும் போது பல அற்புத சிற்பங்களை காணலாம். மலையை விட்டு இறங்கி வரும் போது அடிவாரத்தில் சித்தாதிரீ கணபதியை வணங்க வேண்டும். அத்துடன் தாழக்கோயிலுக்குள் செல்ல வேண்டும். அங்குதான் அம்பிகையை தரிசிக்க முடியும். இந்த அன்னை திருபுரசுந்தரி என்னும் பெயரில், கேட்கும் எல்லா வரங்களையும் எந்த பாகுபாடு இல்லாமல் பக்தர்களுக்கு தருகிறாள். அதனால் “பெண்ணின் நல்லாள்”  என்று திருஞான சம்பந்தர் இந்த இறைவியை போற்றுகிறார். 
 இந்த ஸ்தலம் அப்பர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் போன்ற பெரிய மாகான்கள் முனிவர்கள் பாதம்பட்ட இடம் என்பதால் இந்த ஸ்தலத்தில் நம் பாதமும் பட்டால் ஜாதக தோஷங்களும், துஷ்டசக்திகளால் உண்டாகும் துன்பங்களும் விலகியோடும். இரண்டு வெள்ளை கழுகரையும், வேதகிரிஸ்வரரையும் திரிபுரசுந்தரியையும் தரிசித்து பல பாக்கியங்களை தடையின்றி பெற்று வளம் பெறுவோம்.  ♦
பக்தியுடன்
R. வஜ்ஜிரவேலு.





தேவை தண்ணீர் சிக்கணம்




நரேந்திர மோடி முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு (2001-ம் ஆண்டுக்கு
முன்பு) குடிநீர்ப் பிரச்னை பூதாகாரமாக இருந்தது. கடந்த 75 ஆண்டுகளில் 26
பஞ்சங்கள் குஜராத்தில் கோரத்தாண்டவம் ஆடியுள்ளன. அதாவது, சராசரியாக 3 ஆண்டுக்கு ஒருமுறை பஞ்சம் வந்துள்ளது.

குஜராத் ஒரு வறண்ட பகுதி என்பதால், தண்ணீர்ப் பிரச்னை இருக்கத்தான்
செய்யும் என்று அனைவரும் கூறினர். அது மட்டுமல்லாமல், இந்தத் தண்ணீர்ப்
பிரச்னை இன்னும் மோசமடையும் என்றும், இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும் கூறினார்கள்.

என்ன செய்தார் மோடி?
குடிநீர்ப் பிரச்னையின் மூல காரணங்களை மோடி ஆராய்ந்தார். முதலில் சரி
செய்யப்படவேண்டியது நீர் நிர்வாகம் என்பதை அவர் உணர்ந்தார். கால தாமதம் இன்றி 2001-ம் ஆண்டிலேயே பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். குறிப்பாக பூமியை உறிஞ்சி தண்ணீர் எடுக்கும் நிலையை மாற்றி, மழை நீரையும் ஆற்று நீரையும் குடிநீருக்காகப் பயன்படுத்தவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காகப் பல்வேறு கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.

குஜராத்தின் தென் கிழக்கில் ஓர் ஓரமாக ஓடும் நர்மதை நதிதான், குஜராத்தின்
மிகப்பெரிய நீர் ஆதாரம். இதை வறண்ட பகுதிகளுக்கும், நல்ல குடிநீர்
கிடைக்காத பிற பகுதிகளுக்கும் பயன்படுத்த முடிவு செய்தார். இதற்காக
ஏராளமான பெரிய கால்வாய்கள் வெட்டப்பட்டன. 1987 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 அடி விட்டமுள்ள பெரிய குழாய்கள் அமைக்கப்பட்டன. இத்தகைய பிரதானக் குழாய்களிலிருந்து 1,15,058 கிலோமீட்டர் தூரத்துக்குக் கிளைக் குழாய்கள் அமைக்கப்பட்டன. அவைமூலம், குக்கிராமங்களுக்கும் தற்போது குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. இந்தத் திட்டத்தின்மூலம் 11,000-க்கும் மேற்பட்ட கிராமங்களும் 127 நகரங்களும் தரமான குடிநீர் வசதி பெறுகின்றன.

குஜராத்தில் ஏராளமான புதிய குளங்கள், ஏரிகள், கண்மாய்கள்
வெட்டப்பட்டுள்ளன. மற்றும் ஏற்கெனவே இருக்கும் ஏரிகள், குளங்கள்,
கண்மாய்கள் அனைத்தும் தூர் வாரப்பட்டுள்ளன.குடிநீர்ப் பிரச்னையை
முழுமையாகத் தீர்த்ததோடு நரேந்திர மோடி நின்றுவிடவில்லை. குஜராத்தில்
வருங்காலங்களில் எப்போதுமே குடிநீர்ப் பிரச்னை ஏற்பட்டுவிடக்கூடாது என்று எண்ணித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இங்குதான் நரேந்திர மோடி,  மற்ற தலைவர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்.

கிராமங்களில் நீர் நிர்வாகம்
: மக்களின் பங்களிப்பு இல்லாமல் செயல்படுத்தப்படும் எத்தகைய அரசுத்
திட்டங்களும் வெற்றி பெறாது என்பதில் உறுதியாக உள்ளார் நரேந்திர மோடி.
இதன் விளைவாக கிராம மக்களே தங்களின் நீர் ஆதாரத்தை நிர்வகிக்கும் அமைப்பு முறையை மோடி ஏற்படுத்தியுள்ளார்.

கிராம அளவில் அந்தந்தக் கிராமவாசிகளைக் கொண்டு தண்ணீர் கமிட்டிகள்
அமைக்கப்பட்டுள்ளன. அந்த கமிட்டி கிராம சபையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. தண்ணீர் கமிட்டியே அந்த கிராமத்தின் தண்ணீர்ப் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும். நீர் ஆதாரங்களைப் பராமரிப்பது, ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான தரமான குடிநீரை வழங்குவது, குடிநீருக்காக ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு கட்டணம் வசூலிப்பது என்பதை முடிவு செய்து, அந்தப் பணத்தை வசூலிப்பது போன்ற பணிகளை இந்த தண்ணீர் கமிட்டி செய்துவருகிறது.

2012-ம் ஆண்டுக் கணக்குப்படி குஜராத்தில் 17,895 கிராமங்களில் தண்ணீர்
கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, ஒவ்வொரு கிராமத்திலும் 5
பேருக்கு, குடிநீர் தரப் பரிசோதனை மேற்கொள்ளப் பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளது. அதோடு அதற்குத் தேவையான கருவிகளையும் அரசே
வழங்குகிறது.

தண்ணீரை எவ்வளவு கஷ்டப்பட்டுச் சேமிக்கிறார்களோ, அதே அளவு
முக்கியத்துவம், தண்ணீர் வீணாகாமல் தடுப்பதிலும் கொடுக்கப்படுகிறது.

மழை நீரானாலும், ஆற்று நீரானாலும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வீணாகக்கூடாது என்பதில் நரேந்திர மோடி கண்ணும் கருத்துமாக உள்ளார். கிராம அளவில் உள்ள தண்ணீர் கமிட்டியில் உள்ளவர்கள், தண்ணீர் வீணாவதைத் தடுப்பதிலும் கவனம் செலுத்துகின்றனர்.

வீடுகளுக்குக் குடிநீர் வழங்க அமைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டிகளுக்கு
நீரேற்று நிலையங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வருகிறது.
இத்தகைய நீரேற்று நிலையங்களிலிருந்து ஒவ்வொரு கிராம நீர்த்தேக்கத்
தொட்டிகளுக்கும் எவ்வளவு லிட்டர் தண்ணீர் தேவையோ அவற்றை மட்டுமே
வழங்குகின்றனர்.

நவீன முறையில் குடிநீர் விநியோகம்:

ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் இணைப்பு மூலம் வழங்கப்படும் தண்ணீர்,
வீணாகாமல் விநியோகம் செய்யப்படுகிறது. எலக்ட்ரானிக் கருவிகள்மூலம் நவீன முறையில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஒரு தனி நபருக்குக்
குளிப்பதற்கும், குடிப்பதற்கும், சமைப்பதற்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு
70 லிட்டர் தண்ணீர் வீதம் வழங்கப்படுகிறது. கிராமத்தில் உள்ள வீடுகள்,
அவற்றில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கிட்டு, கிராம தண்ணீர் கமிட்டி அந்த கிராமத்துக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு லிட்டர்
தண்ணீர் தேவை என்பதை முடிவு செய்து அதனை நீரேற்றும் நிலையத்துக்குத்
தெரிவிக்கிறது. அதன்படி நீரேற்று நிலையத்திலிருந்து அந்தக் கிராமத்துக்குத் தேவையான தண்ணீர் கிராம நீர் தேக்கத் தொட்டிக்கு  விடப்படுகிறது.

இப்போது, ஒரு வீட்டில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது என்று
வைத்துக்கொள்வோம். அல்லது அந்தக் கிராமத்தில் ஒரு திருவிழா நடக்கிறது
என்று வைத்துக்கொள்வோம். இதுபோன்ற நேரங்களில், கிராம தண்ணீர்
கமிட்டியிடம் முன்னரே தங்களுக்கு எவ்வளவு தண்ணீர் கூடுதலாகத்
தேவைப்படுகிறது, எத்தனை நாட்களுக்குக் கூடுதலாகத் தண்ணீர் தேவைப்படுகிறது  என்பதைத் தெரிவிக்கவேண்டும். அதற்கேற்ப அவர்கள் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வார்கள். அனைத்தும் எலக்ட்ரானிக் மூலமாகச் செயல்படுவதால் நடைமுறைப்படுத்துவது எளிதாகிறது.


இப்படி வழங்கப்படுகின்ற தண்ணீர் இலவசமாக வழங்கப்படுவதில்லை. தண்ணீரைப் பயன்படுத்தும் அளவைப் பொறுத்து 10 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது போக தினசரி ‘ஒரு வீட்டுக்கு ஒரு ரூபாய்’ என்ற திட்டமும் நடைமுறையில் உள்ளது. இது குஜராத்தில் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும்.

தண்ணீருக்கான பட்ஜெட்:

இந்திய அளவில் மழைநீர் சேகரிப்பு 17 சதவீதம். ஆனால் குஜராத்தில் மழைநீர்
சேகரிப்பு 72 சதவீதம். நீர் நிர்வாகத்தில் குஜராத் மாநிலம் இந்தியாவிலேயே
முதல் இடத்தில் உள்ளது.

குஜராத்தில் அடுத்துவரும் 20 ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு தொலை நோக்குப்  பார்வையில் குடிநீர்க் குழாய் பதிப்பது போன்ற வேலைகளைச் செய்துவருவதால் இனிவரும் ஆண்டுகளில் குடிநீர் மற்றும் கழிவு நீர் மேம்பாட்டுக்காக அதிக நிதி ஒதுக்க வேண்டியதில்லை என்ற சூழல் உள்ளது.

கிராம அரசு:

நிதியை ஒதுக்கீடு செய்து முறையான திட்டங்களைச் செயல்படுத்தியதன் மூலம், ‘தீர்க்கவே முடியாது’ என்று அனைவரும் ஒப்புக்கொண்ட குஜராத்தின்
குடிநீர்ப் பிரச்னை முற்றிலுமாகத் தீர்க்கப்பட்டுவிட்டது. இதன்  முதுகெலும்பாகச் செயல்பட்டு வருவது கிராம சபையுடன் இணைந்து செயல்படும்  ‘தண்ணீர் கமிட்டி’ என்றால் மிகையாகாது.இதுதான் உண்மையான ‘கிராம அரசு’ இந்தத் திட்டத்துக்காக குஜராத்துக்கு பிரதமர் விருது கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, மோடியின் இந்தத் திட்டத்தை வெகுவாக பாராட்டி, விருது அளித்துள்ளது.

குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரின் மணிநகர் பகுதியில் புதிதாகக் கட்டி
முடித்துள்ள எல்.ஜி மருத்துவமனையை நான் பார்வையிட்டேன். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவரிடம் நான் பேசினேன். அப்போது அவர் சொன்ன ஒரு தகவல். ‘முன்பெல்லாம் ரயில் மூலம்தான் எங்களுக்குக் குடிநீர் வந்தது. ஆனால் இப்போது குழாய் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் விடுகிறார் நரேந்திர மோடி. சபர்மதி நதியின் ஆற்றங்கரைத் திட்டம் மூலம் அகமதாபாத் நகரின் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், குடிநீருக்காகப் படாத பாடு பட்ட எங்களுக்கெல்லாம் இப்போது வீட்டுக்கே தண்ணீர் வருகிறது. என்றார் அவர் பெருமிதமாக.

இந்தியாவிலேயே வறண்ட மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில் தண்ணீர்ப்
பிரச்னையைத் தீர்ப்பது சாத்தியம் என்றால் ஏன் பிற மாநிலங்களில் முடியாது?

"மோடியின்  குஜராத்" என்ற நூலிலிருந்து.

வரதராஜப் பெருமாள் - காஞ்சிபுரம்


 திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள்
கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக  முக்கியத்துவம் வாய்ந்த தலம. இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில்  அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.

 காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஏறத்தாழ 3 கிலோமீட்டரில் அமைந்துள்ளது.

 பிரம்மாவின் வேள்விக்கு மகிழ்ந்து வரம் அருளியதால் வரதராஜர் என்ற திருநாமம்!  இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும்  முதலாம் ராஜராஜசோழனால் கி.பி 1018 - 1054 க்குள் கட்டப்பட்ட சிறப்பான  ஆலயம். பல்லவ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களாலும் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. கோவில் 24 ஏக்கர், கொடி மரத்தில் உள்ள அடுக்குகள் 24, கோவில் குளத்தின் படிக்கட்டுகள் 24. பெருமாளைத் தரிசிக்க 24 படிகளைக் கடந்து  செல்ல வேண்டும். இவை காயத்ரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகிறது. இராஜகோபுரம் 96 அடி.

நாயக்க மன்னர்களால் அமைக்கப்பட்ட கல்யாண மண்டபம் சிறப்பான சிற்பங்களால் ஆனது. எட்டு வரிசைகள்; வரிசைக்குப் பன்னிரண்டு தூண்கள். யாளி, போர்க்குதிரை, குதிரைமேல் போர் வீரர்கள் எனப் பல்வேறு சிற்பங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை! 96 சிற்பங்களோடு உள்ளே இருக்கும் சிறிய நான்கு  தூண் மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

மூலவர், வரதராஜர் (தேவராஜர்), தாயார், பெருந்தேவி. திருமங்கை மன்னனும், பூதத்தாழ்வாரும் பாடிய தலம்.

பிரம்மா பிரதிஷ்டை செய்த அத்திவரதரை அனந்தசரஸ் தீர்த்தத்திற்குள் வைத்துள்ளனர். அத்தி எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில்  பள்ளி கொண்டிருக்கிறார்.

பிரம்மா நிறுவிய அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசிக்கலாம். 1938, 1979 ஆம் ஆண்டுகளில் வெளியே எடுத்து 48 நாட்கள் சிறப்பு வழிபாடுகள்
மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் 2019 ல் இத்தகைய தரிசனம் கிட்டும்!

முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியெடுத்து, கோயிலில் பள்ளிகொள்ள வைத்து 48 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும்.  அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு ஆகையால், எங்கிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருமாளைத் தரிசிப்பர்.

ராமானுஜருக்கு அருளிய பெருமான்:

 ராமானுஜர் அறிவாற்றலின் மீது பொறாமை கொண்ட அவரது ஆசான் யாதவப் ப்ரகாசர்,  அவரைக் கங்கையில் தள்ளிக் கொல்லத் திட்டமிடுகிறார். தனது தம்பி மூலம்  சதியை அறிந்து ராமானுஜர் தப்பிக்கிறார் . காட்டில் வழி அறியாது கலங்கி  நிற்கிறார். அப்போது பேரருளாளனும், பெருந்தேவித்
தாயாரும் வேடர் வடிவில் வந்து அவரிடம் குடிக்க நீர் கேட்கிறார்கள்.

அருகில் இருநத சாலக் கிணற்றிலிருந்து நீர் கொணர்ந்து தருகிறார்.
அவர்களோடு பயணிக்கிறார். திடீரென வேடுவனும், அவன் மனைவியையும் காணவில்லை! வரதராஜப் பெருமாளின் கோபுரததைச் சிறிது தொலைவில்  காண்கிறார். கண்டதும் வழிகாட்டியவர் வரதராஜர் என்று! உணர்கிறார்.

 கோயிலின் சிறப்புகள்:
அத்திகிரி, திருக்கச்சி என்பது தலத்தின் தொன்மையான பெயர்கள். திருக்குளத்தின் கிழக்கில் இருக்கும் சக்கரத்தாழ்வார் மிகப் பெரிய  திருமேனி. 16 கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்திக் காட்சி தருகிறார்.  இன்னும் ஆலயத்தின், ஆண்டவனின் சிறப்புகள் ஏராளம்.


திருவிழா : பிரம்மோற்ஸவம்- வைகாசி - 10 நாட்கள் திருவிழா - பௌர்ணமி விசாக  நட்சத்திரத்தன்று நடக்கும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். நவராத்திரி - புரட்டாசி - 10 நாட்கள் திருவிழா -
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். வைகுண்ட ஏகாதசி மற்றும் புது  வருடப் பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும்  சிறப்பானது. வைகாசி மாதத்தில் உற்சவத் திருவிழாவில் கருடசேவையும், தேரும் மிகப்பிரபலம்.

சக்கரத்தாழ்வார் : திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என
பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும்
காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி
தருகின்றது.இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி  காட்சியளிக்கின்றார்.

பிரம்மாவின் யாக அக்னியில் கிடைத்த மூர்த்தி, இங்கு முகத்தில் தழும்புடன்
உற்சவராக இருக்கிறார். இதனால், இவருக்குப் படைக்கும் நைவேத்யத்தில்
மிளகாய் சேர்ப்பதில்லை. இவரே இங்கு பிரதானம் பெற்றவர் என்பதால்,
பக்தர்கள் இவரைத் தரிசித்து விட்டே மூலவரைத் தரிசிக்கிறார்கள

திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

நாரத முனிவர்,பிருகு முனிவர், பிரம்மா, ஆதிசேசன் கஜேந்திரன்
ஆகியோருக்கு பெருமாள் காட்சி தந்த முக்கிய தலம்.

  இங்குள்ளபெருமாளை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும் சக்கரத்தாழ்வார் எனப் பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் இருக்கும் பெருமானை வணங்கினால் திருமணத்தடை நீங்குகிறது. வழக்குகளில் வெற்றி கிடைக்கிறது. வாழ்வில் வளமும் நிம்மதியும் கிடைக்கிறது என அனுபவித்தவர்கள் கூறுகிறார்கள்.

தனி சன்னதியில் வீற்றிருக்கும் பெருந்தேவித் தாயாரை வணங்கினால்
பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் தீர்கின்றன.குழந்தை வரம்
வேண்டுவோரும் தாயாரை வணங்குகின்றனர்

 நம்மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோஷங்களும் கிரக தோஷங்களும் விலகி ஷேமம் உண்டாக இவ்விடத்தில் பெருமாளின் பின்புறம் இருக்கும் தங்கபல்லி வெள்ளி பல்லிகளாக இருக்கும் சூரியன் சந்திரரை தரிசனம் செய்தால் நலம் உண்டாகும். நம் மனதில் நினைத்த காரியம்  கைகூடும் என்பது ஐதீகம்.

புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில்  அரசமரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.

பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தல், தாயாருக்கு புடவை சாத்துதல், மற்றும் சர்க்கரைப் பொங்கல் பெருமாளுக்கு படைத்தல் ஆகியவை இங்கு நேர்த்திகடன்களாக இருக்கின்றன.

மங்களாசாஸனம்:

பூத்தாழ்வார், திருமங்கையாழ்வார்,


பூதத்தாழ்வாரின் பைந்தமிழ்:
என்னெஞ்சம் மேயான் என் சென்னியான், தானவனை-
வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்-
ஊழியான் ஊழி பெயர்த்தான், உலகேத்தும்-
ஆழியான் அத்தியூரான்.

அத்தியூரான் புள்ளை ஊர்வான், அணிமணியின்-
துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ-
மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்.

பக்தியுடன்
R.வஜ்ஜிரவேலு.

சீர்காழி


ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் "ஸ்ரீ காழி நகரம்' அதுவே தமிழில்,
"சீகாழி' என்றானது. சீ= மிகவும் உயர்ந்தது. இப்போது இவ்வூரை "சீர்காழி'
என்று தவறாக அழைக்கின்றனர். ஆனாலும் விவரமறிந்த சைவப் பெரியோர்கள், "காழி நகரம்" என்றோ, "சீகாழி' என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர்.

சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரது பாடல் பெற்ற சீர்காழி பிரமபுரீஸ்வரர், சட்டைநாதசுவாமி சிவாலயம் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சம்பந்தரின் அவதாரத் தலம் . சம்பந்தர் ஞானப்பால் உண்டமை, பிரமன் வழிபட்டமை, புறாவடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் பேறுபெற்றமை முதலிய அற்புதங்கள் நிகழ்ந்த தலமென்பது தொன்நம்பிக்கை.

புராண வரலாறு:

ஏழு தீவுகள் அடங்கிய இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தில் கடல் பொங்கி
அழித்தது. அப்போது சீகாழி திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக
மிதந்து அழியாதிருந்தது. இதனால் இவ்வூர் "தோணிபுரம்' என்றும்
போற்றப்படுகிறது.

மகாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார். பின்னர், அகங்காரம் ஏற்பட்டுபூமியை நடுங்கச் செய்தார். இதையறிந்த சிவாம்சமான வடுக பைரவர், தமது திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார்.  இதையறிந்த மகாலட்சுமி  சிவபெருமானிடம் வேண்ட, சிவன் மகாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார். பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப் போர்த்தியும் காட்சி தந்தார். இதனால் சீகாழி பைரவருக்கு "சட்டை நாதர்' என்ற திருப்பெயர் ஏற்பட்டது.


காவிரியின் வடகரைத் தலங்களுள் சீகாழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இதனைக்  "கழுமல வள நகர்' என்றும் குறிப்பிடுவர். பிரமன் தன் தொழில் தடையின்றி  நடைபெற வழிபட்டதால் "பிரம்ம புரம்' என்றும், மூங்கில் வடிவமாக இறைவன்தோன்றி இந்திரனுக்கு அருள் செய்ததால் "வேணுபுரம்' என்றும், சூரனுக்கு பயந்த தேவர்கள் புகலிடமாகப் பூசித்ததால், "புகலி' என்றும், வியாழன்  பூசித்ததால் "வெங்குரு' என்றும், பிரளய காலத்தில் தோணியாய் மிதந்ததால்  "தோணிபுரம்' என்றும், ராகு பூசித்ததால் "சிரபுரம்' என்றும், வராக
மூர்த்தி பூசித்ததால் "பூந்தராய்' என்றும், சிபிச் சக்கரவர்த்தி பேறு பெற்றதால் "புறவம்' என்றும், கண்ணன் பூஜித்ததால் "சண்பை' என்றும், பத்திரகாளி, காளிங்கன், பாம்பு பூஜித்ததால் "ஸ்ரீகாளிபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது.


இவ்வாலயத்தில் 47 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டாம்
குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், வீர
ராஜேந்திரன், ராஜாதிராஜ தேவர், கோப்பெருஞ் சிங்கன், பரகேசரி வர்மன்,
கிருஷ்ண தேவராயர் எனப் பல்வேறு மன்னர்களின் கல்வெட்டுகள் இங்குள்ளன.


சீகாழி நகரின் மையப் பகுதியில், நான்கு புறமும் கோபுரங்களுடன், உயர்ந்த
திருச்சுற்று மதில்களுடனும் இவ்வாலயம் விளங்குகிறது. இறைவன்
பிரம்மபுரீசுவரருக்கும், இறைவி திருநிலை நாயகிக்கும்,
திருஞானசம்பந்தருக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. வடக்கு
உட்பிரகாரத்தில் முத்துச் சட்டை நாதர் அருள் பாலிக்கின்றார். தெற்கு
உட்பிரகாரத்தில் அறுபத்து மூவர் காட்சியைக் காணலாம். இங்கு சட்டை நாதர்
பலிபீடமும் அமைந்துள்ளது.


மேல் பிரகாரத்தில், கருவறை விமானமேறிச் சென்று தரிசிக்கப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. விமானத்தில் பெரிய உருவத்தில் உமா மகேசுவரர், தோணியப்பராகக் காட்சி தருகின்றார். இவரையடுத்து மேல்புறத்தில் சட்டை நாதர் சந்நிதி  அமைந்துள்ளது. இவர் திருப்பெயராலேயே இத்திருத்தலம் அழைக்கப்படுகின்றது.

ஆலய வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் திருஞானசம்பந்தர்
திருக்கோயிலும், அதனருகே திருநிலைநாயகி திருக்கோயிலும் அமைந்துள்ளன. அதன்  அருகே பெரிய அளவில் பிரம்ம தீர்த்தம், நாற்புறமும் கருங்கல்  படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தில் குரு மூர்த்தம், லிங்க மூர்த்தம், சங்கம மூர்த்தம் என
மூன்று வகையான மூர்த்தங்களும் ஒருங்கே அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும். மலைமீது பெரிய நாயகி சமேத பெரிய நாயகராகக் காட்சி தரும் தோணியப்பரே குரு  மூர்த்தமாவார். இவரே திருஞானசம்பந்தருக்கு ஞானோபதேசம் செய்த குரு ஆவார்.

இத்தலத்தின் மூலவராக விளங்கும் பிரம்மபுரீஸ்வரரே லிங்க மூர்த்தமாகும்.
இவர் பிரம்மனால் பூஜிக்கப்பட்டவர்.

விமானத்தின் உச்சியில் ஆணவ மாயையால் உலகைக் கலக்கிய திருமாலின் உடலைப் பிளந்து, அவருடைய எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் கொண்டு,  "சட்டை நாதர்' என்ற திருநாமத்தோடு தனிச் சிறப்புடன் பைரவர்விளங்குகிறார்.

உண்மையில் "காக்கும் கடவுளான' மாலவனுக்கு ஆணவ மலம் ஏது? நாமெல்லாம்  கர்வமின்றி இருக்க வேண்டுமென்பதை உணர்த்துவதற்காகப் பரம்பொருளே இரண்டு வடிவமேற்று நிகழ்த்திய திருவிளையாடல் இது.

சட்டைநாதரை வணங்கினால் தீய குணங்கள் நம்மை சட்டை செய்யாது விலகும்!  சங்கடங்கள் தீரும்! சிவசக்தியும் கிடைக்கும்!


இவ்வாலயத்தில் பிரம்ம தீர்த்தம், காளி தீர்த்தம், கழுமல தீர்த்தம்,
விநாயக நதி என இருபத்திரண்டு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இவற்றில்
ஞானசம்பந்தருக்கு அன்னை ஞானப்பால் ஊட்டிய இடமான பிரம்ம தீர்த்தம் மிகவும்  சிறப்பு வாய்ந்ததாகும்.


இவ்வாலயத்தில் நாள்தோறும் ஆறு காலப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்திரை  மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இதில் இரண்டாம் திருவிழா,  திருமுலைப்பால் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. திருநிலை நாயகிக்கு ஆடிப்பூர உற்சவமும், நவராத்திரி உற்சவமும் நடைபெறுகின்றன. சட்டை நாதருக்கு வெள்ளிக் கிழமைதோறும் நள்ளிரவில் நடைபெறும் பூஜை மிகவும்  சிறப்பு வாய்ந்ததாகும். இவருக்கு புனுகுச் சட்டம் சார்த்தி வடை, பாயசம் படைக்கப்படுகிறது.

சீகாழி சட்டைநாத சுவாமி ஆலயம் வருவோர்க்கு மிகப்  பெரிய வாய்ப்பு ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருஞான சம்பந்தர் அவதரித்த
இல்லத்தைத் தரிசிப்பது (இது காஞ்சி சங்கர மடத்தின் பராமரிப்பில் உள்ளது).
ஞானசம்பந்தருக்குப் பொன்தாளம் வழங்கிய "திருக்கோலக்கா' என்னும் தலமும் அருகில் இருக்கின்றது.

சீகாழியால் உலகெங்கும் சிவ மணம் பரவியது! இன்றும் அது பரவிக்
கொண்டிருக்கிறது! வருங்காலத்திலும் அது தொடரும் என்பது நிச்சயம்.


    தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
    காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
    ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
    பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 
    அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
    பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை
    ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்த
    திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே.
       
திருச்சிற்றம்பலம்.
R .வஜ்ஜிரவேலு

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

குஜராத்தில் கல்விப் புரட்சி

ல்வி கற்றவர்களின் எண்ணிக்கைதான் ஒரு நாட்டு வளர்ச்சியின் அளவுகோல்.

கடந்த பத்து ஆண்டுகளில் தொடக்கக் கல்வியிலிருந்து உயர் கல்விவரை
குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களே இதற்குச் சான்று.

மோடியின் அரசு, ‘ஷாலா பிரவேஷ் மகோத்சவ்’ என்ற திருவிழாவை நடத்திவருகிறது.  இது பள்ளிக்கூடங்கள் திறக்கும் முதல் நாளைத் திருவிழாவாகக் கொண்டாடுவதாகும்.

இந்தத் திருவிழாவின் நோக்கம் என்னவென்றால், பள்ளியில்
சேரும் வயது நிரம்பிய அனைத்துக் குழந்தைகளையும் தேடிப்பிடித்துப்
பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது. அதேபோல் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய
மாணவ, மாணவிகளையும் கண்டுபிடித்து அவர்களை அந்தந்த வகுப்புகளில் சேர்த்து படிப்பைத் தொடரச்செய்வது ஆகும்.


இத்திருவிழாவில் கல்வித்துறையினர் மட்டுமல்ல, அரசுத் தலைமைச் செயலர்,  துறைச் செயலர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட அனைத்து அரசு அதிகாரிகளும் ஈடுபடுகின்றனர். முதல்வர் நரேந்திர மோடியும் ஒவ்வோர்  ஆண்டும் தவறாமல் இந்தத் திருவிழாவில் பங்கேற்கிறார்.

பெண் கல்வி:
அனைத்துப் பெண் குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதற்காக ‘கன்யா கேலவாணி’  என்னும் இயக்கம் 2003ல் ஆரம்பிக்கப்பட்டது. மக்களைப் பார்த்து நரேந்திர  மோடி, ‘நான் உங்களிடம் கேட்கும் பிச்சை ஒன்றே ஒன்றுதான். உங்கள் பெண்  குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்கள்’ என்றார்.

 அதோடு அவர் நின்றுவிடவில்லை. ஒவ்வோர் ஆண்டும், பள்ளிக்கூடம் திறக்கும்போது நரேந்திர மோடியே நேரில் சென்று பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு  வலியுறுத்துகிறார். இதற்காக அவர் ஆண்டுக்கு ஆறு நாட்களை ஒதுக்குகிறார்.


பெண் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காக, கன்யா கேலவாணி ரதம் ஒன்று கிராமம் கிராமமாகச் செல்கிறது. இது பெண் கல்வியின் அவசியத்தை உணர  வைக்கிறது.

மோடியின் அதிரடி உத்தரவின்மூலம் மாநிலம் முழுதும், பள்ளிக்கூடங்களில்
கழிப்பிட வசதிகள் போதுமான அளவுக்கு ஏற்படுத்தப்பட்டன.

வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள பெண் குழந்தைகள் பள்ளியில் சேரும்போதே அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் போடப்படுகிறது. எட்டாம் வகுப்பை  முடித்தவுடன், அல்லது பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தவுடன் அந்த மாணவிக்கு வட்டியுடன் சேர்த்துப் பணம் வழங்கப்படுகிறது.

பெண் கல்வித் திட்டத்துக்காகவே சிறப்பு நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நரேந்திர மோடிக்கு முதல்வர் என்ற முறையில் வழங்கப்படும் பரிசுப்
பொருட்களை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணமும் இந்தப் பெண்  கல்வித் திட்ட நிதியில் முழுவதுமாகச் சேர்க்கப்படுகிறது.

குஜராத்தில் பள்ளிக்கூடம் செல்லும் வயதை ஒரு குழந்தை எட்டிவிட்டால்,
அந்தக் குழந்தையைக் கட்டாயம் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு சென்று விடுவார்கள். தப்பவே முடியாது. இடையில் நின்றாலும் விடுவதில்லை.

மருத்துவப் பரிசோதனை:
குஜராத்தில் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை ஓர் இயக்கமாகவே  நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு வாரம், பள்ளிக்கூட சுகாதார வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது மாநிலம் முழுதும் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் நாள், ‘சுத்தமாக இருப்பது எப்படி’ என்பதை வலியுறுத்தும்
நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரண்டாம் நாள், அடிப்படைச் சுகாதாரப்
பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. மூன்றாம் நாள் சத்தான உணவு பற்றிய
நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் பல்வேறு போட்டிகளும்
நடத்தப்படுகின்றன.

மாணவ, மாணவிகளுக்கான சமையல் போட்டி முக்கியமானது
ஆகும். இதன்மூலம் பள்ளியில் படிக்கும்போதே அவர்கள் நன்கு சமைக்கும்
திறனையும் வளர்த்துக்கொள்ள முடிகிறது. அதோடு, அந்தப் பகுதியில்
கிடைக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகளைக் கொண்டு எப்படிச் சத்தான
உணவைச் சமைப்பது என்பதும் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. நான்காம் நாள்,  மேம்பட்ட சுகாதாரப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. ஐந்தாம் நாள், அதாவது இறுதி நாள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்தச் சுகாதார வார நிகழ்ந்ச்சியில் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி
பள்ளிக்கு வர முடியாத அப்பகுதிச் சிறுவர்களும் கலந்துகொள்கின்றனர்.
இதன்மூலம் அவர்களும் பயன் அடைவது இந்தத் திட்டத்தின் சிறப்பு ஆகும்.

மக்களின் பங்களிப்பு:
அரசுப் பள்ளிக்கூடங்களைத் தவிர்த்து, தனியார் பள்ளிக்கூடங்களுக்குச்
செல்வோர் முன்வைக்கும் ஒரே வாதம், தரம். இந்தப் பிரச்னையைத் தீர்க்க
‘குணோத்சவ்’ என்ற இயக்கத்தை 2009ல் தொடங்கினார் மோடி. மோடி, அவரது
அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 3000-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள்
ஆகியோர் இதில் அங்கத்தினர். இவர்கள் குஜராத்தில் உள்ள மொத்தம் 32,274
தொடக்கப் பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்ய ஆண்டுதோறும் மூன்று நாட்களைச்  செலவிடுகின்றனர்.

இந்த ஆய்வின்போது, மாணவர்களின் வாசிப்புத் திறன், எழுத்துத் திறன்,
அடிப்படை அறிவியல், கணிதத் திறன் போன்றவை கவனிக்கப்படுகின்றன. இதன்மூலம் அப்பள்ளியின் தரம் மதிப்பிடப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படுகின்றன.

இந்த இயக்கம் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது, இதில் இன்னும்
மேம்படுத்தவேண்டியது ஏதேனும் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளும் பணியை ஒரு மூன்றாம் அமைப்பிடம் கொடுத்துள்ளனர். அவர்களும் இந்த இயக்கத்தின்  போக்கைக் கண்காணித்து, தேவையான பரிந்துரைகளை வழங்கிவருகின்றனர்.

புதிய பல்கலைக்கழகங்கள்:

2001-ம் ஆண்டு குஜராத்தில் 11 பல்கலைக்கழகங்களே இருந்தன. ஆனால் 2011-ம் ஆண்டில் 41 பல்கலைக்கழகங்களாக இது உயர்ந்து நிற்கிறது. ஒவ்வொன்றும்  தனித்தன்மை வாய்ந்தவை. உதாரணத்துக்கு, குழந்தைகள் பல்கலைக்கழகத்தை  எடுத்துக்கொள்வோம். இந்தப் பல்கலைக்கழகத்தில், குழந்தை பிறப்புமுதல் அதனை ஒவ்வொரு நிலையிலும் எவ்வாறு அதனை வளர்க்கவேண்டும் என்பது தொடர்பான விரிவான படிப்புகளைச் சொல்லிக் கொடுக்கின்றனர். பல ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதை 2009-ம் ஆண்டு நரேந்திர மோடி தொடங்கினார். இந்தியாவில் குழந்தைகளுக்கான பல்கலைக்கழகம் இது ஒன்றுதான் உள்ளது. உலக  அளவில் மொத்தம் 4 பல்கலைகழகங்கள்தாம் உள்ளன. அதில் இதுவும் ஒன்று. உலகம் முழுவதும், பெட்ரோல் சம்பந்தப்பட்ட படிப்புகளுக்குக் கடும் கிராக்கி உள்ளது. இத்தகைய படிப்பின் அவசியத்தையும் வேலை வாய்ப்பையும்
புரிந்துகொண்ட நரேந்திர மோடி, ‘தீனதயாள் உபாத்தியாயா பெட்ரோலியப்
பல்கலைக்கழகம்’ என்ற பல்கலைக்கழகத்தை காந்திநகரில் தொடங்கியுள்ளார்.  இங்கு பெட்ரோலியம் தொடர்பான அனைத்துப் படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.

ஐ.டி.ஐ. மாணவர்கள்:

முன்பெல்லாம் குஜராத்தில் ஐ.டி.ஐ படித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம், ஐ.டி.ஐ தேர்ச்சி  பெற்ற மாணவர்களின் அடிப்படைக் கல்வித் தகுதி, 12-ம் வகுப்பு தேர்ச்சி  பெற்றவர்களைவிடக் குறைவாகவே கணக்கிடப்பட்டது. அதாவது ஐ.டி.ஐ படிப்பதற்கு அடிப்படைக் கல்வித் தகுதியான 10-ம் வகுப்புத் தேர்ச்சியே, அவர்களின்  கல்வித் தகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனால் 12-ம் வகுப்புத் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் அரசு வேலைக்கான தேர்வுகளை ஐ.டி.ஐ முடித்த மாணவர்கள் எழுத முடியாத நிலை இருந்தது.

10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஐ.டி.ஐ இரண்டு ஆண்டுகள் படித்தும் 12-ம்
வகுப்பு மாணவர்களுக்கு இணையாக இல்லாத நிலையை உணர்ந்த நரேந்திர மோடி,  ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் 12-ம் வகுப்பு முடித்த
மாணவர்களுக்கு இணையானவர்கள் என்ற நிலையை ஏற்படுத்தினார். இதற்காக புதிய  சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தார். இதன் மூலம், ஐ.டி.ஐ முடித்த மாணவர்களுக்குத் தொழில் சார்ந்த வேலைவாய்ப்பும் கிடைக்கும். 12-ம்  வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எழுதும் அரசு தேர்வுகளை எழுதி அதன்மூலமும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மேலாண்மைக் கல்வி நிறுவனம்:

அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம் போக மற்றுமொரு உலகத் தரம் வாய்ந்த மேலாண்மைக் கல்வி நிறுவனத்தை ஏற்படுத்த மோடி விரும்பினார். குஜராத்தில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார். இதனால் ‘ஐ கிரியேட்’ என்ற புதிய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தை, குஜராத் தலைநகர்  காந்திநகரில் ஏற்படுத்தினார்.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி, இந்தக் கல்வி நிறுவனத்தின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை உருவாக்க 150 கோடி ரூபாயை குஜராத் அரசு ஒதுக்கியது என்றால், இந்தக் கல்வி நிறுவனத்தின் முக்கியத்துவத்தை நாம்  புரிந்துகொள்ளலாம். இந்தக் கல்வி நிறுவனத்தின் முக்கியப் பணி,  தொழில்முனைவோரை ஊக்கப்படுத்துவது ஆகும்.

மனிதவளத்தில் பெருமளவு பின்தங்கியிருந்த குஜராத்தை மோடியின் பல்வேறு  செயல்திட்டங்கள் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுவந்துள்ளன. இனி வரும்  ஆண்டுகளில் குஜராத் மனிதவளத்திலும் பெருமளவு முன்னேறும் என்பது தெளிவு.

(தொகுப்பு: மோடியின் குஜராத் என்ற நூலிலிருந்து,)

திருச்சிற்றம்பலம்.
R .வஜ்ஜிரவேலு

திருச்செங்கோடு

 
ந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் திருச்செங்கோடு (ஆங்கிலத்தில்:Tiruchengode), ஒரு நகராட்சி ஆகும்.

மக்கள்தொகையில் இதுவே இம்மாவட்டத்தின் பெரிய நகரம் ஆகும்.

இங்குள்ள மலை செந்நிறத்தில் உள்ளதால் இவ்விடம் திருச்செங்கோடு எனப்பெயர் பெற்றது.

 வரலாறு:

பழங்காலத்தில் இந்நகர் திருக்கொடிமாடச் சென்குன்றனூர் எனவும்,
திருச்செங்கோட்டாங்குடி எனவும் பெயர் பெற்றது. சம்பந்தரின்
தேவாரப்பாடலிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது

இது கொங்கு நாட்டிலுள்ள ஏழு சிவ தலங்களில் ஒன்றாகும். இது கொங்கு
நாட்டைச்சேர்ந்த கீழ்கரை பூந்துறை நாட்டை சார்ந்தது ஆகும்.
காவிரியின் மேற்குப்புறம் உள்ளது" மேல்கரை பூந்துறை நாடாகும்", காவிரியின் கிழக்குப்புறம் உள்ளது  "கீழ்பூந்துறை நாடாகும்".

சிலப்பதிகாரத்தில் இந்நகர் நெடுவேல் குன்று என கூறப்பட்டுள்ளது. மலை மீதுள்ள முருகனை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்.

கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவைகளில் இவ்விடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகருக்கு தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி எனப் பல பெயர்களும் உள்ளது.

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் "வெந்தவெண் ணீறணிந்து" முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

அதன் முதல் செய்யுள்:
“  வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ்மார்பில் நல்ல
பந்து அணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்து அருளிக்
கொந்து அணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.”



செந்நிறத்தில் அமைந்த மலையின் உச்சியில் கிழக்கு நோக்கி செங்கோட்டு  வேலவர் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் எனப்படும் மாதொரு பாகர் சன்னதி அமைந்துள்ளது. மாதொரு பாகர் லிங்க வடிவில் அல்லாமல் 6 அடி முழு திருமேனியுடன் காட்சியளிக்கிறார். பாதி புடவை - பாதி வேட்டி அலங்காரத்துடன் மூலவர் (சிவன்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாசாணத்தால் ஆனது.

இம்மலைக்கோயில் சிவனுக்குரியதாக சொல்லப்பட்டாலும் இங்கு திருமாலுக்கும் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சன்னிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும்.

இம்மலை மீது ஏற 1250 படிக்கட்டுகள் கொண்ட பாதை உள்ளது. தற்போது மலை மீது ஏற சாலை வசதி செய்யப்பட்டுள்ளதால் வாகனங்கள் மூலம் இதனை அடையலாம்.


படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில்
செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது.


இங்கு முதலில் அமைந்தது முருகனுக்கான கோயில் ஆகும். அதையொட்டியே
இந்நகரின் பெயர் அமைந்துள்ளதை கவனிக்கலாம்.


திருச்செங்கோடு மலைமீதுள்ள மாதொரு பாகர் கோயில் திருச்செங்கோடு ஈரோடிலிருந்து 18 கிமீ தொலைவிலும் சேலத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும் நாமக்கலிருந்து 32 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

 ஈரோட்டையும் ஆத்தூரையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 79 இதன் வழியாக செல்லுகிறது. திருச்செங்கோட்டையும் நாமக்கலையும் மாநில நெடுஞ்சாலை 94 இணைக்கிறது. பரமத்தியையும் சங்ககிரியையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 86 இதன் வழியாக செல்லுகிறது.

தொழில்:

திருச்செங்கோடு ஆழ்துளை கிணறு வெட்டும் ரிக் எனப்படும் வண்டிகள் நிறைந்த இடமாகும். ஆழ்துளை கிணறு வெட்டும் வண்டியை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம்.

இங்கு விசைத்தறிக் கூடங்கள், சைசிங்க் ஆலைகள், நூற்பு ஆலைகள்,
லாரி கூடு கட்டும் தொழில், விவசாயம் ஆகியவை அதிகளவில் உள்ளன.

அத்தகைய பழமை வாய்ந்த திருசெங்கோட்டில் திருஞான சம்பந்தர் பாடிய
திருநீலகண்டம்  பதிகம் - சம்பந்தர் தேவாரம் - திருமுறை 1.116

பதிக வரலாறு :

கொடிமாடச் செங்குன்றூரில் திருஞான சம்பந்தர், அடியார்களுடன் தங்கியிருந்த பொழுது பனிக்காலம் வந்து விட்டது. அப்பொழுது அடியார்கள் நளிர் சுரத்தினால் வருந்தினார்கள்.

(நளிர்தல் - குளிர்தல்; நடுங்குதல்).

(திருஞான சம்பந்தர்)  பிள்ளையாரிடம் விண்ணப்பம் செய்து கொண்டனர். 'இந்த நளிர் சுரம் வருதல் இந்நாட்டிற்கு இயல்பாயினும் நமக்கு இந்த நோய்
எய்தப்பெறா. நீலகண்டமே எந்நாளும் அடியார் இடர்தீர்க்கும்  அருந்துணை'
என்று எண்ணி 'அவ்வினைக் கிவ்வினை' என்னும் திருப்பதிகத்தைத் தொடங்கி, ஒவ்வொரு திருப்பாடல் இறுதியிலும் 'செய்வினை தீண்டா திருநீல கண்டம்' எனஆணைவைத்து அருளிச்செய்தார்கள். உடனே அடியார்களுக்குமட்டுமன்றி அந்நாட்டிலேயே சுர நோய் தொலைந்தது.


சம்பந்தர் தேவாரம் - திருமுறை
1.116.1)
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பதம் பிரித்து:
அவ்வினைக்(கு) இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃ(து) அறிவீர்
உய்வினை நாடா(து) இருப்பதும் உந்தமக்(கு) ஊனம் அன்றே
கைவினை செய்(து) எம் பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய் வினை வந்(து) எமைத் தீண்டப்பெறா திரு நீலகண்டம்.

கைவினை - கிரியைகளாகிய சிவப்பணி:  ஊனம் - குறைவு; குற்றம்;
செய்வினை-  வினைத்தொகை - முக்காலத்திய வினைகளையும் சுட்டியது.

உரை:
'நாம் முற்பிறவிகளில் செய்த வினைகளுக்கு ஏற்பவே, இப்பிறவியில் பிராரத்தம் வந்தூட்ட இத்துன்பம் அநுபவிக்கிறோம்' என்று சொல்லப் பெறுவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றிலிருந்து விடுதிபெறும் வழியை நீவிர் தேடாதிருப்பது உமக்குக் குறையன்றோ? நாம் அனைவரும் சிவபிரானுக்கு அடியவர்கள். அவ்விறைவனை நோக்கிச் சரியை, கிரியை முதலான சிவப்பணிகளைச் செய்து அவ்விறைவன் திருவடியைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் நாம் செய்த பழவினைகள் நம்மை
வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.


1.116.2)
காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பதம் பிரித்து:
காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால்
ஏ வினையால் எயில் மூன்(று) எரித்தீர் என்(று) இரு பொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்(து) எமைத் தீண்டப் பெறா திரு நீலகண்டம்.

கா - சோலை. தொட்டும் - தோண்டியும். ஏ வினையால் - அம்பின் தொழிலால். எயில் - கோட்டை;

உரை:
சிவனுக்கு அடியவர்கள் ஆன நாம், நந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும், குளங்கள் பல தோண்டியும், நல்லறங்கள் பலவற்றைச் செய்து, கனிந்த மனத்தோடு 'ஓர் அம்பு எய்து முப்புரங்களை எரித்தவனே' என்று காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து சிவபிரானுடைய மலர்போலும் திருவடிகளை வணங்குவோம். அப்படிச் செய்தால் கொடிய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது
திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

1.116.3)
முலைத்தட மூழ்கிய போகங் களுமற் றெவையுமெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவு மிவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பதம் பிரித்து:
முலைத்தட[ம்] மூழ்கிய போகங்களு[ம்] மற்(று) எவையும் எல்லாம்விலைத்(து) அலையா வணம் கொண்(டு) எமை ஆண்ட விரி சடையீர்
இலைத் தலைச் சூலமும் தண்டு[ம்] மழுவும் இவை உடையீர்
சிலைத்(து) எமைத் தீவினை தீண்டப் பெறா திரு நீலகண்டம்.

விலைத்தலையாவணம் - விலைத்து அலையா வண்ணம் - அடியேனை விலகச் செய்து அலையா வண்ணம்; விலையாகக் கொண்டு எனலுமாம். விலைத்தலை ஆவணம் செய்து என்றுமாம்.
சிலைத்து - ஒலித்து.

உரை:
"மகளிர் இன்பத்தில் திளைத்து மகிழ்தல் முதலான உலக நுகர்வுகள் எல்லாம்
நம்மை விலையாகக் கொண்டு, அலைக்காதவாறு எம்மை ஆட்கொண்டருளிய விரிந்த சடையை உடையவரே! முவிலை நுனி உடைய சூலம், தண்டாயுதம், மழு முதலிய படைக்கலங்கள் உடையவரே!" (என அடியார்களாகிய நாம் சிவபெருமானைப் போற்றுவோம். அப்படிச்
செய்தால்) பழைய தீவினைகள் ஆரவாரித்து வந்து நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.


1.116.4)
விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பதம் பிரித்து:
விண்ணுல(கு)  ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணியர் என்(று) இரு போதும் தொழப்படும் புண்ணியரே
கண் இமையாதன மூன்(று) உடையீர் உம் கழல் அடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப் பெறா திரு நீலகண்டம்.

விச்சாதரர் - வித்யாதரர்  -பதினெண்கணத்துள் ஒரு சாரார்;

உரை:
"விண்ணுலகை ஆளுகின்ற வித்யாதரர்களும், வேதியர்களும் 'புண்ணிய வடிவமானவர்' என்று காலை மாலை இருபோதும் துதித்துத் தொழும் புண்ணியரே! இமையாத முக்கண்களை உடையவரே! உம் திருவடிகளைப் புகலாக அடைந்தோம்" (என அடியார்களாகிய நாம் சிவபெருமானைப் போற்றுவோம். அப்படிச் செய்தால்) வலிய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

1.116.5)
மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பதம் பிரித்து:
மற்(று) இணை இல்லா மலை திரண்டன்ன திண் தோள் உடையீர்
கிற்(று) எமை ஆட்கொண்டு கேளா(து) ஒழிவதும் தன்மை கொல்லோ
சொல் துணை வாழ்க்கை துறந்(து) உம் திருவடியே அடைந்தோம்
செற்(று) எமைத் தீவினை தீண்டப் பெறா திரு நீலகண்டம்.

மற்று இணை இல்லா - வேறு ஒப்பு இல்லாத;  கிற்று - வலிமைகொண்டு;  தன்மை - குணம்; பெருமை;  சொல் துணை வாழ்க்கை - சொல்லப்படுகிற துணைகள் பலவற்றோடும் கூடிய வாழ்க்கை;  செற்று - வருத்தி;

உரை:
"ஒப்பற்ற மலைபோல் திரண்ட திண்மையான தோள்களை உடையவரே! எம்மைப் பெருவலிமை கொண்டு ஆட்கொண்டும் சிறிதேனும் எம் குறையைக் கேட்காமல் இருப்பது உமது பெருமைக்கு ஏற்புடையதாமோ? இல்லற வாழ்க்கைக்குச் சொல்லப்படும் எல்லாத் துணைகளையும் விடுத்து உம் திருவடிகளையே சரணாக அடைந்தோம்"  (எனஅடியார்களாகிய நாம் சிவபெருமானைப் போற்றுவோம். அப்படிச் செய்தால்)  தீவினைகள் பெருவலிமை கொண்டு வருத்தி நம்மை வந்து அடையமாட்டா. இது
திருநீலகண்டத்தின் மேல் ஆணை.
 
 1.116.6)
மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பதம் பிரித்து:
மறக்கு[ம்] மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்
பிறப்(பு) இல் பெருமான் திருந்தடிக் கீழ்ப் பிழையாத வண்ணம்
பறித்த மலர்கொடு வந்(து) உமை ஏத்தும் பணி அடியோம்
சிறப்(பு) இல் இத் தீவினை தீண்டப் பெறா திரு நீலகண்டம்.

வற்புறுத்துதல் - உறுதிப்படுத்திச் சொல்லுதல்; வலிமைப்படுத்துதல்;
சிறப்பு இல் இத்தீவினை - சிறப்பற்ற இந்தத் தீவினை;

உரை:
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி
மறக்கும் இயல்பை உடைய நம் மனத்தை மாற்றி மலமறைப்பால் தடுமாறும் உயிரை வற்புறுத்திப் பிறப்பற்ற பெருமானாகிய அச்சிவபெருமானுடைய அழகிய  திருவடியின் கீழ் தவறாதவாறு மனத்தை நிறுத்தி அப்பொழுது பறித்த மலர்களைக்  கொண்டு பூசித்து "உம்மை ஏத்தும் பணியை உடைய அடியவர் நாங்கள்" எனக் கூறி  வழிபட்டுவரின் சிறப்பற்ற தீய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது  திருநீலகண்டத்தின் மேல் ஆணை.



1.116.7)
(இப்பாடல் கிடைக்கப்பெறவில்லை)
 
 1.116.8)
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பதம் பிரித்து:
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்(து) உம் கழல் அடிக்கே
உருகி மலர் கொடு வந்(து) உமை ஏத்துதும் நாம் அடியோம்
செரு இல் அரக்கனைச் சீரில் அடர்த்(து) அருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப் பெறா திரு நீலகண்டம்.

செரு இல் அரக்கன் - போர் இல்லாத இராவணன்;
திரு இல் இத் தீவினை - சிவஞானச் செல்வத்தை இல்லதாக்கும் தீவினை;

உரை:
"பிறவியை அறுத்து உலக வாழ்க்கையை வெறுத்து உம் கழல் அணிந்த திருவடிக்கே மனம் உருகி மலர்களைக் கொண்டு அருச்சித்து உம்மைப் போற்றுகிறோம். தன்னை எதிர்ப்பார் இல்லாத வலிய இராவணனைப் பலரும் போற்ற அடர்த்துப்பின் அருள்  செய்த பெருமானே!" (என அடியார்களாகிய நாம் சிவபெருமானைப் போற்றுவோம். அப்படிச் செய்தால்) சிவனடி வழுத்தும் செல்வத்தைப் போக்கும் இந்தப் பழைய  தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

1.116.9)
நாற்ற மலர்மிசை நான்முக னாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய வடியு முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பதம் பிரித்து:
நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாது செய்து
தோற்றம் உடைய அடியு[ம்] முடியும் தொடர்(வு) அரியீர்
தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம்
சீற்றமதாம் வினை தீண்டப் பெறா திரு நீலகண்டம்.

நாற்றம் - மணம்;
தோற்றுதல் - தோன்றுதல் - கட்புலனாதல் (to be visible); அறியப்படுதல்;
தொடர்வு - தொடர்தல்;  சீற்றம் - கோபம்;

உரை:
நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி,  "மணங்கமழும் தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாது செய்தபோது, அவர்கட்கு எதிரே கட்புலனாகத் தோன்றி, அவர்களால் அடியும் முடியும் அறியப்பெறாத தன்மையை  உடையவரே!", என்று அழைத்து, நாம் காணத்தோன்றுதலையும் செய்யும் அவ்விறைவனை  நாம் தொழுது வணங்குவோம். அவ்வாறு வழிபடின், சினந்துவரும் பழவினைகள்  நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

1.116.10)
சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி யிருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பதம் பிரித்து:
சாக்கியப் பட்டும் சமண் உரு ஆகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்
பூக் கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்
தீக்குழித்  தீவினை தீண்டப் பெறா திரு நீலகண்டம்.

சாக்கியம் - புத்தமதம் (Buddhism, as founded by Šākya-muni)
சமண் - அருகமதம் (Jainism); அம்மணம் (nudity);
இருதலைப் போகம் - இம்மை மறுமை இன்பம்.
கொன்றை - Indian Laburnum tree;
புரிசடை  - திரண்டு சுருண்ட சடை (tangled, matted locks);
தீக்குழித் தீவினை - தீக்குழியினைப் போலக் கனலுவதாகிய தீவினை;

உரை:
சிலர் புத்த மதத்தைச் சார்ந்தும், சமண சமயத்தைச் சார்ந்து ஆடையின்றித்
திரிந்தும் சிவபிரானை வணங்கும் பாக்கியமின்றி இம்மை மறுமை இன்பங்களையும்  அவற்றைப் பெறும் பற்றையும் விட்டுப் பயனற்றவராயினர். நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? நாம் அவ்விறைவனை நோக்கிக் "கொன்றை மலர்  மணக்கும் சடையை உடையவரே! உம் திருவடிகளைப் போற்றுகின்றோம்" எனக் கூறிச் செயற்படின் தீக்குழி போலக் கனலும் பழைய தீவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா.
இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.


1.116.11)
பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகி லிமையவர் கோனடிக்கண்
திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.

பதம் பிரித்து:
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான்
இறந்த பிறவி உண்(டு) ஆகில் இமையவர் கோன் அடிக்கண்
திறம் பயில் ஞான சம்பந்தன செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே.

திறம் - இயல்பு; மேன்மை;
பயில்தல் - தங்குதல் (to stay, abide,); தேர்ச்சியடைதல்; கற்றல்; சொல்லுதல்;

உரை:
இப்பிறவியிலேயே சிவபிரான் திருவடிகளை அடைய விரும்பி வழிபட்டு, மீண்டும்  பழவினைகளால் பிறப்பு உண்டு என்றால், தேவர்களின் தலைவனாகிய சிவபிரான்  திருவடிகளின் பெருமைகளை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகச் செந்தமிழ்ப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்களாயின், அவர்கள் தேவர்கள்  நிறைந்த வானுலகில் அவ்வானவர் கோனோடு கூடி இருக்கும் நிலையைப் பெற்று  இன்புறுவர்.

அன்புடன்,
R.வஜ்ஜிரவேலு

ம. பொ. சிவஞானம்


ன்றுள்ள (தமிழ் அறியாதவர்கள்) அரைகுறை தமிழ் அறிஞர்கள் அலையில்எல்லோராலும் மறக்கப்பட்டு விட்டவர் திரு. ம.பொ.சிவஞானம் அவர்கள்.


ம. பொ. சிவஞானம் (ஜுன் 26, 1906 - அக்டோபர் 3, 1995) இந்தியாவைச் சேர்ந்தவிடுதலைப் போராட்டக்காரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி என அறியப்படுபவர்.

சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப் பட்டார். 2006 ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை
நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது.


வாழ்க்கைக் குறிப்பு:

மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம.பொ.சி. என்று ஆயிற்று. சென்னை விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 26\6\1906 அன்று பிறந்தார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம்
வகுப்போடு முடிந்தது. குழந்தைத் தொழிலாளியாக நெசவுத் தொழில் செய்தார்.

 பின்னர் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார். இத்தொழிலை அவர் அதிக நாள்
செய்து வந்தார். 31 ஆம் வயதில் திருமணம் நடந்தது. ஒரு மகன் இரு மகள்கள்
எனக் குழந்தைகள்.

 பின்னர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைவாசம், காங்கிரஸ்
இயக்கத்தில் சேர்ந்து சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். எழுநூறு
நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார். ம.பொ.சி. தன் சிறைவாசத்தைச்
சிலப்பதிகாரத்தைக் கற்றுக்கொள்ளப் பயன்படுத்தினார். ஆயினும் சிறைவாசம்  அவருக்களித்த பரிசு தீராதவயிற்றுவலி. வாழ்நாளின் இறுதிவரை அவரை அந்த வயிற்று வலி வாட்டி வதைத்தது.

தமிழரசுக் கழகம்:

1946 ஆம் ஆண்டில் தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். ஆகஸ்ட்  8, 1954 ஆம் ஆண்டில், ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார்.

போராட்டங்கள்

மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் பேராடினார்.


மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 'மதராஸ் மனதே' என்று
ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத்  தலைநகராகச் சென்னையை இருத்தினார். திருவேங்கடத்தையும் (திருப்பதி)  தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை, ஆனால் அப்போராட்டத்தால் திருத்தணி ஆந்திரத்துக்கு போகாமல் தமிழகத்துக்கு  கிடைத்தது.

(திருத்தணி பேருந்து நிலையத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது)

குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை
தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும் செங்கோட்டையும்
தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளத்துடன்
இணைக்கப்பட்டன.

நூல்கள்

    * இவர் கட்டபொம்மனின் வரலாற்றை நூலாக எழுதினார்.
    * வ. உ. சிதம்பரம் பிள்ளையின் வரலாற்றை நூலாக எழுதினார்.
    * 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்ற நூலை எழுதினார். அந்நூலுக்கு
அவர் 1966 ஆம் ஆண்டில் சாகித்திய அக்காடமி விருது பெற்றார்.
    * 'எனது போராட்டம்' என்ற பெயரில் தன் வரலாற்றை எழுதியுள்ளார்
    * விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு
    * விடுதலைப் போரில் தமிழகம்

இவர் நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.

சிறப்புகள்

    * சிலம்புச் செல்வர்' என்ற விருது சொல்லின் செல்வர் ரா. பி.
சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பெற்றது.

    * சென்னை, மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தன.

    * மதுரைப் பல்கலைக் கழகம் 'பேரவைச் செல்வர்' என்ற பட்டம் வழங்கியது.

    * மத்திய அரசு பத்மஸ்ரீ விருது தந்து போற்றியது.

    * தமிழக மேலவையின் தலைவராக பணியாற்றினார்.

    * 'செங்கோல்' என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார்.

    * தமிழ் முரசு என்ற இதழை நடத்தினார்.

    * சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேன் மற்றும் கல்விக் குழுத் தலைவராக பணியாற்றினார்.

ம. பொ. சிவஞானத்தைப் பற்றிய நூல்கள்

   1. சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன்..., மு. மாரியப்பன், சர்வோதய
இலக்கியப் பண்ணை, மதுரை.

   2. அறிஞர்கள் பார்வையில் ம. பொ. சி.,    ம.பொ.சி.மாதவி பாஸ்கரன்,
பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி.அறக்கட்டளை, சென்னை 41.


திருச்சிற்றம்பலம்.
R .வஜ்ஜிரவேலு