ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறு பையன் ஒருவன் தெளிவாகவே கேட்கிறான் "அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஏன் அவர்களின் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதில்லை" என்று...
ஆனால், அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் அபத்தமாக, பொய், புரட்டு பதில்களைச் சொல்லி, அவன் வாயை அடக்குகிறார்.
இதுவா நேர்மை, இதுவா இதற்கு சரியான பதில் என்று எவரும் கேள்வி கேட்கவில்லை.
ஏனெனில் அப்படி கேள்வி கேட்டால் நம்மை அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து நீக்கி விடுவார்கள் அல்லது நாம் ஒருசில வினாடிகள் திரையில் தோன்றும் பாக்கியத்தைப் பறித்து விடுவார்கள், என்று அந்த பார்வையாளர்கள் எல்லோரும் வெட்கமே இல்லாமல் அந்த நெறியாளருக்கு கை தட்டுகிறார்கள்.
உண்மையில் எத்தனை அரசு ஆசிரியர்களும், ஆசிரியைகளும் முழுமையான அர்ப்பணிப்போடு பள்ளியில் பாடம் நடத்துகிறார்கள்.....
அக்கறையுடன் பாடம் நடத்துவது என்பது, கடந்த நாற்பது வருஷங்களில், காணாமல் போன ஒன்று....
இதை எந்தப் பட்டிமன்றமும், விவாத மேடையும் மறுக்க இயலாது.
இன்று, கல்வி ஒரு வியாபாரம்!..
அதில், ஆசிரியர் ஒரு வியாபாரி!..
கல்வி என்பது மனிதனை நெறிப் படுத்துவதாக, நேர்மை படுத்துவதாக, பண் படுத்துவதாக இருந்தவரை அது ஒரு தெய்வீகத் தன்மையுடன் இருந்தது.
ஆனால் கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளில் கல்வி என்பது, பண்பை ஊட்டுவதற்குப் பதில், பணிவைப் போதிப்பதற்கு பதில், உண்மையை உணர்த்துவதற்கு பதில், வெறும் போலியான, தகவல் குப்பைகளையும், அறிவியல் கூறுகளையும் மட்டுமே பிரதிபலிக்கும் ஒன்றாக மாறியதன் காரணமாக, இன்றைய மாணவர்களில் பலர் பண் படுத்தப்படுவதில்லை! மாறாக, பயன் படுத்தப்படுகிறார்கள்.
அரசு ஆசிரியர்கள் வாங்குகின்ற சம்பளத்திற்கு, அவர்கள் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் உழைத்தாலும், போதாது.
நம்முடைய மாணவர்களை சுயசிந்தனை உடையவர்களாகவும், நம்முடைய பாரதத்தின் பாரம்பரியத்தை அறிந்தவர்களாகவும், நேர்மையான வழிமுறைகளை கடைப்பிடிப்பவர்களாகவும், நியாயமான குணம் படைத்தவர்களாகவும், உண்மையாக உழைக்கும் மனமுள்ளவர்களாகவும் உருவாக்கக்கூடிய அர்ப்பணிப்பும், கடமையும் இன்று ஆசிரியர்களிடம் எந்த அளவுக்கு உள்ளது என்பது கேள்விக்குறி தான்.
பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் பணியை பணம் காய்ச்சி மரமாக மாற்றி, தங்கள் குடும்ப நலன், சந்ததி நலன் பெருக்கி வாழ்தல் ஒன்றே, வாழ்க்கை என்று, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் அரசுப் பள்ளிகளின் தரம் இருக்கும் போது, எந்த அரசு பள்ளி ஆசிரியர், தன் பிள்ளையை தெரிந்தே, இன்னொரு அரசுப் பள்ளி ஆசிரியரை நம்பி ஒப்படைப்பார்.....
இதுதான் உண்மைக் காரணம்.
வேறு எந்த பொய் விளக்கங்களாலும், மாய்மால வார்த்தைகளாலும், சொற்ச் சிலம்பங்களாலும், உண்மையை மறைக்க இயலாது.
இன்று 'மாதா-பிதா-குரு-தெய்வம்' அனைத்தும், தோல்வியடைந்த ஒரு தத்துவம் ஆகிவிட்டது.
இந்நிலை மாற்றப்பட வேண்டும்.
பெற்ற பிள்ளைகளுக்கு பல நூறு நீதிக்கதைகள் சொல்லி வளர்த்த பெற்றோர்களைப் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
இன்றோ நீதிக்கதைகள் சொல்லி வளர்க்கும் தாய்மார்கள் ஒரு சிலரே.
அதேபோல் தான் நீதிக்கதைகள் சொல்லி பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கும் பஞ்சம் ஆகிவிட்டது, மாறாக ம(ன)த மாற்றங்களை நன்றாக செய்கின்றனர்.
பண வேட்டை யோடு மாணவ மாணவிகளைக் கெடுக்கும் சில ஆசிரியர்களையும் பார்த்து விட்டோம்.
இவை அனைத்தையும் உலகில் ஆட விட்டு, வெறும் கல்லாய் மட்டும் மாறிவிட்ட கடவுள்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கலி தோஷம்!.. சர்வ நாசம்!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக